பாலஸ்தீனத்தில் நடத்தப்படும் இனப்படுகொலை தாக்குதல் குறித்து விருது பெற்ற மாணவர் மேடையில் பேசியது திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் வசித்து வரும் மக்கள் தங்களது வசிப்பிடங்களில் இருந்து கான் யூனிஸ் பகுதிக்கு புலம் பெயர்ந்துள்ளனர். இந்நிலையில், அங்கு நிலவும் பட்டினி சூழல் கவனம் பெற்றுள்ளது.
பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் உள்நோக்கத்துடன் பட்டினி சூழலை ஏற்படுத்தியுள்ளது. இது இனப்படுகொலையின் ஒரு வடிவம். இதனால் காசா முழுவதும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது என ஐ.நா வல்லுநர்கள் தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர். ஐ.நா-வின் உணவுக்கான உரிமை சார்ந்த சிறப்பு அறிக்கையாளர் மைக்கேல் ஃபக்ரி உட்பட ஐ.நா வல்லுநர்கள், காசாவில் பஞ்சம் ஏற்பட்டுள்ளதை மறுக்க முடியாது என தெரிவித்துள்ளனர்.
தெற்கு இஸ்ரேலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி அன்று ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 1,195 பேர் உயிரிழந்ததாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் காசாவை சேர்ந்த சுமார் 60 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னை ஐஐடியின் 61வது பட்டமளிப்பு விழா ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் 2012 ஆம் ஆண்டு வேதியியலில் நோபல் பரிசு பெற்ற அமெரிக்காவின் உயிர்வேதிநுட்ப அறிவியலாளர் பிரயன் கே.கோபில்கா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார்.
இன்றைய பட்டமளிப்பு விழாவில் 2,236 மாணவர்களுக்கு, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட என மொத்தம் 3,016 பட்டங்கள் வழங்கப்பட்டன. 444 பேர் முனைவர் பட்டம் பெற்றனர். அப்போது, பாலஸ்தீனத்தில் நடத்தப்படும் இனப்படுகொலை தாக்குதல் குறித்து விருது பெற்ற மாணவர் மேடையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனஜெய் பாலகிருஷ்ணன் என்ற அந்த மாணவர் பேசியதாவது:
பாலஸ்தீனத்தில் இன படுகொலை நடைபெறுகிறது. பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் போரை நடத்தக் கூடிய நாடுகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவி செய்கின்றன.
தொழில் நுட்ப வளர்ச்சிகள் மகிழ்ச்சியை தந்தாலும் இது போன்ற அழிவுக்கு பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அறிவியல் பின்புலத்தில் இருக்கும் மாணவர்களாகிய நாம் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்ல உள்ளோம் பெரு நிறுவனங்கள் நம்மை எப்படி பயன்படுத்தி கொள்வார்கள் என்பதை விழிப்புடன் பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.







