ஜம்மு காஷ்மீரில் மாற்று திறனாளியான மாணவன் ஒற்றை காலில் 2 கி.மீ தூரம் நடந்து பள்ளிக்கு செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குப்வாராவின் ஹந்த்வாரா பிளாக் பகுதியில் நவ்காம் மாவர் கிராமம் உள்ளது. இது மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் 14 வயதான பர்வைஸ் அஹ்மத் ஹஜாம் என்ற மாணவர் வசித்து வருகிறார்.
தனது லட்சியத்தை அடைய வேண்டும் என்ற துடிப்புடன் இருக்கும் இந்த மாணவர் மாற்று திறனாளி ஆவார். பர்வைஸ் தனது 2 வயதில் பெரிய தீக்காயங்களுக்கு ஆளான போது அவரின் இடது கால் மூட்டுப்பகுதியை இழந்தார்.
ஆனாலும் தனது இலட்சியத்தை அடைவதிலிருந்து அவர் பின்வாங்க விரும்பவில்லை. நன்கு படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் ஒற்றை காலில் சுமார் 2 கி.மீ தூரம் பயணித்து தினமும் பள்ளி சென்று வருகிறார் பர்வைஸ். அவரது கிராமத்தில் சாலைகள் மோசமான நிலையில் இருப்பதால் அரசு வழங்கிய சக்கர நாற்காலியை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கடுமையான வலிகளோடு ஒற்றை காலில் நடந்தாலும் கல்வி கற்கும் ஆர்வம் பர்வைஸூக்கு சிறிதளவும் குறைவில்லை.
https://twitter.com/ANI/status/1532863745424498688
உடலில் சவால் இருந்தும் கல்வி கற்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு ஒற்றை காலில் தினமும் 2 கிமீ தூரம் பயணிக்கும் இந்த மாணவனின் செயல் பல மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. மேலும் இந்த பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.







