திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் சாதிய பாகுபாடால் சக மாணவர்களால் கொடூரமாக வெட்டப்பட்ட மாணவன் சின்னத்துரை மற்றும் அவரது சகோதரி சந்திரா செல்வி இருவரும் மருத்துவமனையில் இருந்தவாறு ஆசிரியர்கள் உதவியுடன் காலாண்டு தேர்வை எழுதினர்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள பெருந்தெருவைச் சேர்ந்தவர்கள் முனியாண்டி-அம்பிகாபதி தம்பதி. இவரது மகன் சின்னதுரை மற்றும் மகள் சந்திரா செல்வி இருவரும் வள்ளியூர் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். அப்பள்ளியில் மாணவர்களுக்குள் சாதி ரிதீயிலான பிரச்னை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் 12-ஆம் வகுப்பு படித்த சின்னத்துரை பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார். ஆகஸ்ட் 9 ஆம் தேதி பள்ளி நிர்வாகத்தினர், சின்னதுரையின் பெற்றோரை தொடர்புகொண்டு மகனை பள்ளிக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவித்துள்ளனர். பள்ளிக்குச் சென்ற சின்னத்துரையிடம் பள்ளிக்கு வராதது குறித்து ஆசிரியர்கள் விசாரித்தபோது தன்னை சில மாணவர்கள் ஜாதி ரீதியாக கேலி, கிண்டல் செய்வதால் பள்ளிக்கு வர விரும்பவில்லை என சின்னதுரை ஆசிரியர்களிடம் கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாணவர்களை அழைத்து ஆசிரியர்கள் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர்கள் பள்ளி முடிந்த பின், சின்னதுரையை மடக்கி மிரட்டியுள்ளனர். பின்னர் வீட்டில் இருந்த = சின்னத்துரையை மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டியது. அதனை தடுக்க சென்ற சகோதரி சந்திரா செல்விக்கும் வெட்டு விழுந்தது.
இந்த கோர நிகழ்வு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இரண்டு பேருக்கும் உரிய சிகிச்சை அளித்து அவர்களது கல்வி தொடர உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு உறுதி அளித்திருந்தது. அதன் அடிப்படையில் இரண்டு பேரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி உயர் சிறப்பு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட மாணவன் சின்னத்துரை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்து வருகின்றார். எனினும் அவரது கல்வி தொடருவதற்கு பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. 12ஆம் வகுப்பு படித்து வரும் சின்னத்துரை தேர்வுகளை எழுதுவதற்கு ஏதுவான நடவடிக்கைகளையும் எடுத்திருக்கிறது.
அதன் அடிப்படையில் தற்போது காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் சின்னத்துரையும் அவரது சகோதரியும் காலாண்டு தேர்வு எழுதுவதற்கு சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். காலாண்டு தேர்வினை ஆசிரியர்களின் உதவியோடு இரண்டு பேரும் எழுதினர்.
முழுமையான சிகிச்சை முடிந்து குணமடைந்த பின்பு அவர்கள் தொடர்ந்து கல்வியை மேற்கொள்ளும் வகையில், அவர்கள் விரும்பக்கூடிய பள்ளியில் சேர்வதற்கும் பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.







