எடப்பாடி பழனிச்சாமி பாஜக காலில் விழ மாட்டார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறியுள்ளார். பாஜக மேலிடம் போன் செய்தால் எடப்பாடி பழனிச்சாமி காலில் விழுவார் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்த நிலையில் செல்லூர் கே.ராஜு இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு முன்னிலையில் பாஜக
மாவட்டத் துணை தலைவர் ஜெயவேல் மற்றும் பாஜக, தேமுதிக கட்சிகளில் இருந்து 100 க்கும் மேற்பட்டவர்கள் அதிமுகவில் இணைந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் கே.ராஜு பேசியதாவது:
பாஜக, திமுக உள்ளிட்ட கட்சிகளில் உள்ள நிர்வாகிகள் அதிமுகவில் இணைய ஆர்வமாக உள்ளனர், எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணைய உள்ளனர், உதயநிதி ஸ்டாலின் வரலாறு தெரியாமல் பேசி வருகிறார், விளையாட்டுத்துறை அமைச்சர் விளையாட்டாகவே
பேசி வருகிறார், தமிழகத்தில் அண்ணா, பெரியார் காலத்திலேயே சனாதனம்
ஒழிக்கப்பட்டு விட்டது.
அதிமுகவில் சாதி, மத, பேதமின்றி செயல்பட்டு வருகிறோம். அதிமுகவின் அவை தலைவராக ஒரு இஸ்லாமியரை எடப்பாடி பழனிச்சாமி அமர வைத்துள்ளார். உதயநிதி ஸ்டாலினுக்கு செல்லூர் ராஜூ சவால் விடுகிறேன், சனாதனம் பேசுகிற
உதயநிதி ஸ்டாலின் திமுகவின் தலைவராக ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரை வர விடுவார்களா?, ஜெயலலிதா ஒரு பிராமணராக இருந்தாலும் 69 சதவீத இட ஒதுக்கீட்டை அமுல்படுத்தினார்.
எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தில் அனைவரும் ஒன்றாக உணவு உண்ண
வைத்தே சனாதனத்தை ஒழித்தார். உதயநிதி ஸ்டாலின் நடிகராக இருந்ததால் அவருக்கு அரசியல் வரலாறு தெரியாது. திமுக சங்கரமடம் இல்லை என முதல்வர் ஸ்டாலின் தேர்தலுக்கு முன்னர் சொன்னார், ஆனால் உதயநிதி அமைச்சர் ஆகியுள்ளார்.
தேர்தலுக்கு தேர்தல் எதையாவது திமுகவினர் பேசுவார்கள், மகளிர் உரிமைத் தொகை
திமுகவுக்கு ஆதரவாக இருக்காது. அண்டை மாநிலமான கர்நாடகாவில் விண்ணப்பித்த அனைவருக்கும் 2000 ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் தமிழகத்தில் 1 கோடியே 6 லட்சம் பேருக்கு உரிமைத் தொகை கொடுத்து விட்டு மற்றவர்களுக்கு ஸ்வாகா கொடுத்து விட்டார்கள். மகளிர் உதவித் தொகை யானை பசிக்கு சோளப்பொரி கொடுத்தது போல உள்ளது.
திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிரைவேற்றாததால் மக்கள் கொதித்து எழுந்துள்ளனர். மானத்தை இழந்து, ரோஷத்தை இழந்து எடப்பாடி பழனிச்சாமி
பாஜக காலில் விழ மாட்டார். அண்ணாமலையின் கருத்து, செயல்பாட்டை தான் எதிர்க்கிறோம். ஜெயலலிதா, அண்ணா குறித்து அண்ணாமலை தொடர்ந்து பேசி வருகிறார்.
முத்துராமலிங்க தேவரை நாங்கள் தெய்வமாக வழிபட்டு வருகிறோம். எங்கள் கொள்கை அண்ணாயிசம். எங்களுக்கு மோடி, நட்டா, அமித்ஷா ஆகியோர் பிரச்சினை இல்லை, அவர்கள் அதிமுவையும், பொதுச் செயலாளரையும் நன்றாக மதிக்கிறார்கள், அண்ணாமலையை மட்டுமே நாங்கள் விமர்சிக்கிறோம்.
பாஜக தலைவரை நாங்கள் எப்படி மற்ற சொல்ல முடியும், பாஜக உட்கட்சி விவகாரத்தில் நாங்கள் தலையிட முடியாது. பாஜகவுக்கு அதிமுக முட்டு
கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறினார்.







