பேனாவிற்கு பதிலாக பெரியார் சிலை வைக்கலாம் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
தாம்பரத்தில் செங்கல்பட்டு மாவட்ட தேமுதிக சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பிறகு பொதுக்கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், கேப்டன் நலமாக உள்ளார் என தெரிவித்தார். இந்த பேனரில் கேப்டனின் இரண்டு கண்கள் எப்படி இருக்கிறதோ, அது போன்று தான் கேப்டன் அனைத்தையும் பார்த்து கொண்டு இருப்பதாக கூறினார்.
எந்த நோக்கத்திற்காக இந்த கட்சி துவங்கப்பட்டதோ, அதை நிச்சயம் நாம் அடைவோம். நாம் செய்த உதவிகளோ, தர்மங்களோ என்றும் வீண் போகாது எனவும் கூறினார். அதனை தொடர்ந்து எழுதாத பேனாவிற்கு 80 கோடி ரூபாய் செலவில் சிலை வைப்பதற்கு, மக்களுக்கு சாலை வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்யலாமே? பேனா வைப்பதற்கு பதிலாக பெரியார் சிலை வைக்கலாமே ?
தங்கப் பேனாவை தான் கேப்டன் விஜயகாந்த் ஒரு விழா வைத்து கொடுத்து விட்டாரே பின் எதற்கு பேனாவை மீண்டும் வைக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்து எந்த ஒரு தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல், பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகிறது. ஆ.ராசா இந்துக்களை பற்றி பேசியது சரியா, தவறா என கூறிய கேள்வியை இனி யாரிடமும் கேட்காதீர்கள்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரிடம் கேட்க வேண்டும், இல்லையெனில் துர்கா ஸ்டாலின், சபரீசன் போன்றவர்களிடம் கேளுங்கள், அவர்கள் தான் பின் வழியாக சென்று பூஜை, குடமுழக்கு போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். கடவுள் இல்லை இல்லை என்று சொன்னவர்கள் இன்று கடவுள் பின்னாடி செல்கிறார்கள் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.







