பயங்கரவாதிகள் தாக்குதல்: தமிழ்நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம்

ஜம்மூ காஷ்மீரில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர் வீர மரணமடைந்தார். ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் தர்ஹால் பகுதியில் பார்கல் என்ற இடத்தில் பாதுகாப்பு படையினர் ராணுவ முகாம்…

ஜம்மூ காஷ்மீரில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர் வீர மரணமடைந்தார்.

ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் தர்ஹால் பகுதியில் பார்கல் என்ற இடத்தில் பாதுகாப்பு படையினர் ராணுவ முகாம் அமைத்து பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் இன்று ஈடுபட்டனர். அப்போது, ராணுவ முகாம் எல்லையை கடந்து உள்ளே ஊடுருவ சிலர் முயன்றுள்ளனர்.

அவர்களை நிற்கும்படி கூறி பாதுகாப்பு படையினர் தடுத்ததையடுத்து திடீரென ராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இதனை தொடர்ந்து ராணுவப் படையினரும் அதற்கு பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலில் 3 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ராணுவத்தின் பதிலடி துப்பாக்கி சூடு சம்பவத்தில், எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.

வீர மரணமடைந்த மூன்று இராணுவ வீரர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்த லட்சுமணன் என்ற உறுதிபடுத்தப்பட்ட தகவல் வெளிவந்துள்ளது. மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள T.புதுப்பட்டியை சேர்ந்த லட்சுமணனுக்கு 24 வயது ஆகிறது. இவரது குடும்பம் விவசாயக் குடும்பம். லட்சுமணனின் தந்தை தர்மராஜ், தாய் ஆண்டாள், அண்ணன் ராமர். இருவரும் இரட்டையர்கள். ராமர் தந்தையுடன் விவசாயப் பணிகளை கவனித்து வந்தார். பி.காம் படித்துள்ள லட்சுமணன் 2019ஆம் ஆண்டுதான் ராணுவத்தில் சேர்ந்துள்ளார். லட்சுமணன் மறைவு செய்தி கேட்டு அவரது கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.