உளுந்தூர்பேட்டையில் ரூ.2,300 கோடி முதலீட்டில் காலணி ஆலை அமைக்க தமிழ்நாடு அரசுடன் பிரபல தைவான் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
விளையாட்டு வீரர்களுக்கென்று பிரத்யேகமாக காலணிகளை தயாரித்து வரும் தைவானைச் சேர்ந்த பிரபல POU CHEN நிறுவனம், சீனா, வியட்நாம், இந்தோனேசியா, கொலம்பியா, வங்கதேசம் என உலகளவில் பல்வேறு நாடுகளில் தனது தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது.
தற்போது இந்தியாவிலும் கால்பதிக்க POU CHEN நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த ஆசனூர் சிட்கோ வளாகத்தில், ரூ.2,300 கோடி முதலீட்டில் விளையாட்டு வீரர்களுக்கான காலணி தயாரிக்கும் ஆலையை நிறுவ முன்வந்துள்ளது.
இந்த ஆலையை நிறுவுவதன் மூலம், மாவட்டத்தில் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்படவுள்ளது. மேலும் 78 சதவீதம் வரையில் பெண்கள் இங்கு பணியமர்த்தப்பட உள்ளனர்.
ஆலையை அமைக்கும் பொருட்டு, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிகழ்வில் தைவான் நிறுவனத்தின் உயர்அதிகாரிகள், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.







