சாதி, மத பிரச்னைகளை தடுக்க தனி உளவுப்பிரிவு தொடங்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
நாங்குநேரியில் பள்ளி மாணவர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 12ம் வகுப்பு மாணவன் சின்னத்துரையை திருமாவளவன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : “மாணவன் உடலில் 21 இடங்களில் வெட்டு காயங்கள் இருக்கின்றன.மேலும் சில நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்க வேண்டும். இருவரும் விரைவில் வீடு திரும்புவார்கள். பள்ளி மாணவர்களிடம் நச்சுகளை பரப்புவது புதிதல்ல.
ஆர்.எஸ்.எஸ், சன் பரிவார அமைப்புகள் நாடு முழுவதும் இந்த வேலையை செய்து வருகின்றனர். இது போன்ற சக்திகளால் இளம் தலைமுறைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மாணவர்களை நச்சுகளை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த குடும்பத்தை முதலமைச்சர் ஸ்டாலின் பாதுகாக்க வேண்டும். அரசின் சார்பில் வீடு ஒன்றை வழங்க வேண்டும். நாங்குநேரியை வன்கொடுமை பகுதியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கனவே எழுந்துள்ளது.சாதியின் பெயரால் நெல்லை, தூத்துக்குடி வட்டாரத்தில் இந்த கொடுமை தொடர்ந்து வருகிறது. சாதி, மத பிரச்னைகளைத் தடுக்க தனி உளவுப்பிரிவு துவங்க வேண்டும்” என திருமாவளவன் கூறினார்.