பஞ்சாப் மாநிலம் அட்டாரி வாகா எல்லையில் தேசியக் கொடி இறக்கும் நிகழ்ச்சியை அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் தனித்தனியாக பிரிய முடிவு செய்தபோது இருநாட்டுக்கும் பொதுவான எல்லையை வகுப்பதில் இங்கிலாந்தைச் சேர்ந்த வழக்கறிஞரான சிரில் ராட்கிளிஃப் முக்கிய பங்காற்றினார். அவர் நினைவாகவே இந்த கோடு ராட்கிளிப்ஃ கோடு (வாகா எல்லை)எனப்படுகிறது. இந்த வாகா எல்லை இந்தியாவின் அம்ரித்ஸரில் இருந்து 32 கிலோ மீட்டர் தொலைவிலும், பாகிஸ்தானில் லாகூரில் இருந்து 24 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
இந்த எல்லையில் தினத்தோறும் இருநாட்டு ராணுவ வீரர்களின் அணிவகுப்பு நடைபெறும். நாள்தோறும் சூரிய அஸ்தமனத்துக்கு 2 மணி நேரத்திற்கு முன்பு இந்த அணிவகுப்பு தொடங்கும். இதில் இந்திய எல்லை பாதுகாப்பு படைவீரர்களும் பாகிஸ்தான் வீரர்களும் கலந்துகொண்டு தங்களின் கம்பீரமான அணிவகுப்பை நடத்துவார்கள்.
அணிவகுப்பு முடிந்த பின்னர் தங்களது நாட்டின் கொடியை கம்பத்தில் இருந்து வீரர்கள் இறக்குவார்கள். பின்னர் இரு நாட்டு வீரர்களும் பரஸ்பரம் கைகுலுக்கி கொள்வார்கள்.
இந்நிலையில் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வாகா எல்லையில் கொடியிறக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அப்போது எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் வீறு நடை போட்டுச்சென்றனர். இதனை அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கானோர் கண்டுகளித்து ஜெய்ஹிந்த் என முழக்கமிட்டு உற்சாக குரல் எழுப்பினர். இதேபோல் பாகிஸ்தான் வீர்ர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து தேசியக்கொடி முறைப்படி இறக்கப்பட்டது.







