பாவூர்சத்திரம் அருகே சர்ச்சுக்கு வரும் பெண்களுக்க பாலியல் தொந்தரவு கொடுத்த மதபோதகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே வடக்கு சிவகாமிபுரத்தில் பிலிவர்ஸ் சர்ச் என்ற ஜெபவீடு அமைந்துள்ளது. இங்கு மதபோதகராக நாகர்கோவில் தாக்காரன்கோணம் பகுதியை சேர்ந்த ஸ்டான்லி குமார் என்பவர் பணியாற்றி வருகின்றார். 49 வயதாகும் இவர் சர்ச்சிற்க்கு வரும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் ஆலங்குளம் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அந்த மனுவில் 3 குழந்தைகளின் தாயான தனது மூத்த மகள் விருதுநகரில் வசித்து வருவதாகவும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் குணமாகத நிலையில், பிலிவர்ஸ் சர்ச்சிற்கு அழைத்து சென்று மதபோதகரான ஸ்டான்லி குமாரிடம் ஜெபிக்கும் படி கூறினேன்.
அவர் எனது மகளை சர்ச்சில் 3 நாட்கள் தங்கும் படி கூறினார். அவர் மீதான நம்பிக்கையில் மகளை அங்கு தங்க வைத்தேன். ஆனால் ஸ்டான்லி குமார் எனது மகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதுடன் ஆபாசமாக பேசியுள்ளார். மேலும் எனது 2 மகள்களிடமும் தொலைபேசியில் அழைத்து பேசி மன்னிப்பு கேட்பது போல நடித்ததுடன், இது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்தால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியும்
உள்ளார். மேலும் அருணாப்பேரியை சேர்ந்த ஒரு பெண் குளிப்பதை நிர்வாணமாக படம் எடுத்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
அந்த சர்ச்சிற்கு வரும் பல பெண்களிடம் ஸ்டான்லி குமார் இதுபோன்று தொடர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். சர்ச்சில் அதி நவீன சுழல் கேமரா பொருத்தி சர்ச்சிக்கு வரும் அனைவரையும் வீடியோ பதிவு செய்து, அதன் மூலம் பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து வைத்து மிரட்டி வருவதாக அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த புகார் மனுவை விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி ஆலங்குளம் டிஎஸ்பி அலுவலகத்தில் இருந்து பாவூர்சத்திரம் போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக பாவூர்சத்திரம் ஆய்வாளர் சுதந்திராதேவி விசாரணை மேற்கொண்டதில், மதபோதகர் ஸ்டான்லி குமார் பெண்களிடம் பாலியல் தொந்தரவு செய்தது உண்மை என தெரியவந்தது.
இதைதொடர்ந்து மதபோதகர் ஸ்டான்லி குமாரை போலீசார் கைது செய்து தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பாதியார் ஒருவர் பாலியல் வழக்கு தொடர்பாக கைதான நிலையில் தற்போது தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் பாலியல் தொந்தரவு செய்த மதபோதகர் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா