காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உதகையில் தோடர் இன மக்கள் உடையணிந்து அவர்களுடன் நடனமாடிய புகைப்படம் சமூக வலைதள பக்கங்களில் வைரல் ஆகி வருகிறது.
கேரள மாநிலம், வயநாடு தொகுதியில் கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி வெற்றி பெற்றாா். பின்னா் மோடி சமூகத்தை அவதூறாகப் பேசியதாக அவருக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனையைத் தொடா்ந்து எம்.பி. பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டாா்.
இதை எதிா்த்து, உச்ச நீதிமன்றத்தில் அவா் மேல்முறையீடு செய்த நிலையில், கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதையடுத்து, தற்போது அவா் வயநாடு எம்.பி.யாக தொடா்கிறாா்.
இவ்வழக்கு விவகாரத்துக்குப் பிறகு வயநாட்டுக்கு முதல்முறையாக ராகுல் காந்தி சனிக்கிழமை செல்கிறார். தில்லியில் இருந்து கோவை விமான நிலையம் வந்த அவர், உதகையில் முத்தநாடு கிராமத்தில் தோடர் இன மக்களைச் சந்தித்துப் பேசினார்.
அங்கு அவருக்கு மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். மேலும் தோடர் இன மக்கள் உடையணிந்து அவர்களுடன் ராகுல் காந்தி நடனமாடினார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. தொடர்ந்து கூடலூா் வழியாக கேரள மாநிலம் வயநாடு செல்கிறாா்.







