இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் வீட்டில் பொருட்களை ஜப்தி செய்ய சென்ற நீதிமன்ற ஊழியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் காவல்துறை உதவி கோரப்பட்டுள்ளது.
நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் நடிகர் சத்தியராஜ் உள்ளிட்டோர் நடித்து, கடந்த 2011ம் ஆண்டு வெளியான சட்டப்படி குற்றம் திரைப்படத்தின் விளம்பர செலவு 76 ஆயிரத்து 122 ரூபாயை வழங்குமாறு விளம்பர நிறுவன உரிமையாளர் சரவணன் சந்திரசேகரிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் வழங்காததை அடுத்து, விளம்பர நிறுவன உரிமையாளர் சரவணன், சென்னை அல்லிகுளம் 25வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
திரைப்படத்தை விளம்பரப்படுத்த சந்திரசேகருடன் ஒப்பந்தம் மேற்கொண்டதாகவும், ஒப்பந்தப்படி தொகையை வழங்கவில்லை என்றும் கூறி, அதை வசூலித்து தரவேண்டும் என
மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பணத்தை செலுத்த உத்தரவிட்டும், இயக்குநர் சந்திரசேகர் தொகையை வழங்காததால் உத்தரவை அமல்படுத்தக் கோரி சரவணன் மீண்டும் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உரிமையியல் நீதிமன்றம், சந்திரசேகருக்கு சொந்தமாக சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் உள்ள ஏசி, டேபிள், பேன் உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் நீதிமன்ற பணியாளர்கள், பொருட்களை ஜப்தி செய்ய சென்ற போது, சந்திரசேகரின் அலுவலக பணியாளர்கள் ஜப்தி செய்ய விடவில்லை என கூறப்படுகிறது.
இதனால் வீட்டில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய காவல்துறை உதவிக்கு உத்தரவு வழங்க நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். விஜய்யின் தந்தை வீட்டில் பொருட்களை ஜப்தி செய்ய காவல்துறை உதவி கோரப்பட்டுள்ளது நடிகர் சங்கத்தினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
– இரா.நம்பிராஜன்








