அரியலூர் மாவட்டம் அருகே, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்து, போலி பணி நியமனம் ஆணை வழங்கிய நபர் கைது.
கடந்த 2019 ஆண்டு அரியலூர் மாவட்டம், தத்தனூர் கிராமத்தை சேர்ந்த கண்ணையன், என்பவரின் மகன் குணசேகரன் (41). இவர், செந்துறை வட்டம் பாளையக்குடி கிராமத்தை
சேர்ந்த இளங்கோவன் மகன் பிரகாசம் (43), என்பவரிடம், அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்காலிக எழுத்தாளர் பணி வாங்கி தருவதாக கூறி 50,000 ரூபாய்
முன் பணம் பெற்றுள்ளார்.
பின்னர் நிரந்தர பணி வாங்கி தருவதாகவும், பிரகாசம் மற்றும் பிரகாசத்தின்
உறவினர்கள் மற்றும் அவரின் நண்பர்கள் அனைவருக்கும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் எழுத்தாளர் பணி வாங்கித் தருவதாக கூறி ரூபாய் 69,35,000 பணத்தை குணசேகரன் அவரது வங்கி கணக்கு மூலமாகவும், நேரடியாகவும் பெற்றுக் கொண்டு உள்ளார்.
பணம் வாங்கிய அனைவருக்கும் அரசு பணி நியமன ஆணை களை வழங்கி உள்ளார். பணி நியமன ஆணை களை பெற்று கொண்டவர்கள், அந்த ஆணைகளை சம்பந்தப்பட்ட
துறை சார்ந்தவர்களிடம் காண் பித்து கேட்ட பொழுது அது போலி பணி நியமன ஆணை என தெரிவித்து உள்ளனர்.
குணசேகரன் இடம் இது குறித்து கேட்டபோது, பிரகாசத்தை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி உள்ளார். இதை தொடர்ந்து பிரகாசம் நேற்று அளித்த புகார் அடிப்படையில், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவு படி அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினரின் துரிதமான விசாரணைக்கு பின் குணசேகரன் மீது 417,420,406,465,468, 471 ,506 (i) IPC உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ்
வழக்கு பதிவு செய்து குணசேகரனை தேடி வந்தனர்.
இந்நிலையில் காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி அரியலூர் மாவட்ட
குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன், காவல் ஆய்வாளர் அனிதா
மற்றும் பல காவலர்கள் சேர்ந்து குணசேகரனை அரியலூர் பேருந்து நிலையம் அருகே சுற்றி வளைத்து கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து குணசேகரனை காவல் துறையினர் செந்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து , நீதிமன்ற உத்தரவின் படி ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைத்தனர். மேலும் விசாரணையில் இவர் 2019 காலகட்டத்தில் அரியலூர் தாசில்தார் அலுவலகத்தில் சிறிது காலம் தற்காலிக பணி செய்ததாக கூறப்பட்டுள்ளது.
-ம. ஸ்ரீ மரகதம்







