வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு மாயமான நபர்… நண்பர்கள் செய்த கொடூர செயல்… ஒரு வருடத்திற்கு பிறகு சிக்கியது எப்படி?

கேரளாவை சேர்ந்த நபரை நண்பர்களே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஹேமச்சந்திரன் (54).  இவர் வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார். அவர் தனது நண்பர்களான நவ்ஷாத், ஜோபிஸ், ஆசிப் ஆகியோருடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி ஹேமச்சந்திரன் கோழிக்கோடு பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதாக நண்பர்களிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் ஒரு வாரமாகியும் அவர் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் கோழிக்கோடு காவல் நிலையத்தில் ஹேமச்சந்திரனை காணவில்லை என புகார் அளித்தனர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்தனடல. அதன் ஒருபகுதியாக ஹேமச்சந்திரனின் நண்பர்களான ஜோபிஸ், ஆசிப் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன்படி, ஹேமச்சந்திரனுக்கும் அவரது நண்பர்களுக்கும் இடையே ரியல் எஸ்டேட் தொழிலில் பணப் பிரச்னை ஏற்பட்டது. அதனால் மூன்று பேரும் திட்டமிட்டு ஹேமச்சந்திரனுக்கு மது ஊற்றி கொடுத்து அவரை அடித்து கொலை செய்தனர். மேலும் அவரது உடலை வாயநாடு மாவட்டத்தை ஒட்டி அமைந்துள்ள தமிழக எல்லைப் பகுதியான சேரம்பாடி காப்பிகாடு வனப்பகுதியில் புதைத்துவிட்டதாகவும் விசாரணையில் தெரிவித்தனர்.

இதனையடுத்து இரு மாநில காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் சேர்ந்து மோப்ப நாய் உதவியுடன் சேரம்பாடி வனப்பகுதியில் புதைக்கப்பட்ட ஹேமச்சந்திரனின் உடலை கைப்பற்றினர். பின்னர் மருத்துவ குழுவினர் மூலம் உடற்கூராய்வு செய்யப்பட்டது. மேலும், குற்றவாளிகளான ஜோபிஸ், ஆசிப் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மற்றொரு குற்றவாளியான நவ்சாத் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.