நீதிமன்ற அனுமதி பெற்று மாற்றுத்திறனாளி அமைத்த கடையை கமிஷன் தரவில்லை என்ற காரணத்திற்காக மாநகராட்சி அதிகாரி கடையை அகற்றி சேதப்படுத்தியுள்ளார்.
சென்னை தியாகராய நகர் சேர்ந்த 43 வயதாகிய மாற்று திறனாளி வேல்முருகன் உயர் நீதிமன்ற அனுமதியின் படி கடந்த மாதம் திநகர் ஜிஎன் செட்டி சாலையில் ஆவின் பாலகம் ஒன்றை திறந்து உள்ளார். நேற்று முன் தினம் மாநகராட்சி சார்பில் இவர் உரிய அனுமதி பெற்று பங்க் கடையை வைக்கவில்லை என மாநகராட்சி வார்டு 133வது உதவி பொறியாளர் ஆனந்த் மற்றும் அதிகாரிகள் அந்த பங்க் கடையை ஜேசிபி எந்திரம் மூலம் அகற்றி அதனை வார்டு அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். 
அரசு வேலைக்கு பல ஆண்டுகளாக முயற்சித்து கிடைக்காததால், மாநகராட்சிடம் பங்க் கடை வைக்க அனுமதி கேட்டு மனு கொடுத்து கிடைக்கவில்லை. அதன் பின்னர், உயர்நீதிமன்றம் மூலம் அனுமதி பெற்று ஜி என் செட்டி சாலையில் கடந்த மாதம் விஜய் ரசிகர் மன்றத்தின் உதவி மூலம் கடை வைத்துள்ளார். இந்நிலையில் உயர் நீதிமன்ற அனுமதியோடு வைத்த பங்க் கடையை எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி மாநகராட்சி உதவி பொறியாளர் எடுத்துச் சென்றதாக வேல் முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
தன் கனவாக நினைத்த கடையை குப்பை போல போட்டுள்ள நிலையை கண்டு கண்கலங்கிய வேல்முருகன், தியாகராய நகரில் பல கடைகள் அனுமதி இல்லாமலேயே இயங்கி வருகிறது. கமிஷன் கொடுப்பதற்கு மறுத்த காரணங்களுக்காக நீதிமன்ற அனுமதி பெற்று, தெருவோர சாலைக்கடை வைப்பதற்கான அடையாள அட்டை உள்ளிட்ட உரிய ஆவணங்கள் வைத்திருக்கும் என் கடையை முன்னறிவிப்பிரின்றி எடுத்துச் சென்றதோடு சேதம் அடையச் செய்திருக்கிறார்கள் என வேல்முருகன் கூறினார்.
இதுகுறித்து வேல்முருகன் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்புகொண்டு கேட்டதற்கு அங்கே கடை வைக்க யார் அனுமதி கொடுத்தது? யாரை கேட்டு வைத்தாய்? கடையை அகற்றும் போது உங்களிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என கூறியுள்ளார்.
இதுகுறித்து நேரடியாக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் விளக்கம் கேட்க பலமுறை அலுவலக எண்ணிற்கு தொடர்பு கொண்டும் அழைப்பை எடுக்கவில்லை.
நீதிமன்றம் குறிப்பிட்ட ஒரு இடத்தை சுட்டிக்காட்டி கடை வைக்க அனுமதி அளித்த பிறகும் வேறு என்ன ஆவணம் தேவை என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் மாற்று திறனாளிகள் துறையை கையில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் இதன் மீது கவனம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேல்முருகன் கோரிக்கை வைத்தார்.







