தகாத உறவில் பெற்றெடுத்த குழந்தையைத் தாய் சட்டவிரோதமாக விற்பனை செய்த சம்பவம் மதுரை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள சிக்கந்தர் சாவடி பகுதியைச் சேர்ந்தவர் பெண் ஓருவருக்கு திருமணமாகி ஒரு மகளும், 3 மகன்களும் உள்ளனர். இவரது கணவர் கடந்த 3 வருடங்களுக்கு முன் இறந்த நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் ஏற்பட்ட தகாத உறவில் கர்ப்பமாகியுள்ளார். இந்நிலையில்,வயிற்றில் கட்டி இருப்பதாகக் கூறி தனது பிள்ளைகளிடம் தான் கர்ப்பமாக இருப்பதை மறைத்து வந்துள்ளார்.
அப்பகுதியில், அரசு ஆரம்பச் சுகாதார நிலைய செவிலியர்கள் கள ஆய்வு மேற்கொண்டபோது, அப்பெண் 8 மாத கர்ப்பிணியாக இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, இந்த விஷயம் பிள்ளைகளுக்குத் தெரிந்தால் தன்னை மதிக்க மாட்டார்கள் எனக்கூறி செவிலியரிடம் கதறி அழுதுள்ளார். இதனால், அப்பெண்ணின் மேல் பரிதாபப்பட்டு மருத்துவர்கள், செவிலியர்கள் தேவையான உதவிகளைச் செய்து அப்பெண்ணின் பிரசவம் வரை வெளியில் யாருக்கும் தெரியாமல் பார்த்துள்ளனர்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு அப்பெண்ணிற்கு மதுரை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. தொடர்ந்து செவிலியர்களின் பாதுகாப்பிலிருந்த அப்பெண் ஒரு வாரத்திற்குப் பின் மதுரை அரசு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். பின்னர் இரண்டு நாட்களுக்கு முன் அப்பெண்ணிடம் குழந்தைக்குத் தடுப்பூசி செலுத்துவது குறித்தும், நலம் விசாரிக்கவும், அப்பகுதி செவிலியர்கள் சென்றபோது குழந்தை அங்கு இல்லை என்பதனை பார்த்த செவிலியர்கள் தாயாரிடம் கேட்டுள்ளனர்.
அதற்கு முன்னுக்குப் பின், முரணாகப் பதில் அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து அலங்காநல்லூர் போலீசில் செவிலியர்கள் புகார் அளித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் முஸ்லிம் தம்பதிக்கு அந்த குழந்தையைத் தானமாக வழங்கியதும் தெரியவந்தது. மேலும், குழந்தை காசுக்காக விற்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அண்மைச் செய்தி: ‘‘மீதமுள்ள 20% வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்’ – திமுக தலைவர்’
விசாரணையில், 18 ஆண்டுகளாகக் குழந்தை இல்லாத முஸ்லிம் தம்பதிகள், முறைப்படி தத்தெடுக்கும் முறை பின்பற்றாததும், தெரியவந்தது. அதனை தொடர்ந்து, இன்று அரசு விதிகளுக்குட்பட்டு முறைப்படி தத்தெடுக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.








