குடியரசுத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒத்த கருத்தோடு நின்று செயல்படுகிற நிலை உருவாகும் என மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவுத்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேரில் சந்தித்து பேசினார். பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு மக்கள் தொடர்பான சில முக்கிய பிரச்சினைகளை தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க அவரை சந்தித்து மனு அளித்ததாக கூறினார். குறிப்பாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அனல் மின் நிலையம் அமைக்க 12 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது அந்த திட்டம் கைவிடப்பட்ட நிலையில் விவசாய நிலங்கள் விவசாயிகளுக்கு திருப்பி வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும் விவசாயிகளுக்கு நிலங்களை திருப்பி அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது அதற்காக தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்ததாக கே.பாலகிருஷ்ணன் கூறினார். ஏழை எளிய மக்களின் வீடுகள் இடிக்கப்படுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். நீர்நிலை புறம்போக்குகளில் அவர்களது வீடுகள் கட்டப்பட்டு இருப்பதாலேயே அந்த வீடுகள் இடிக்கப்படுவது சரியல்ல என்பதையை அரசு நீதிமன்றத்தில் வாதாட வேண்டும் என முதலமைச்சரிடம் வலியுறுத்தியதாக கூறினார்.
சென்னையில் பெத்தல் நகர், சிட்லபாக்கம், கோவிந்தசாமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் இடிக்கப்படும் பிரச்னையில் மே மாதம் சட்டமன்றத்தில் அறிவித்துள்ள அறிவிப்பு அப்பகுதி மக்களுக்கு ஆறுதலையும் நம்பிக்கையும் அளிப்பதாக
இருப்பதாகவும் அந்த அறிவிப்பை பாதுகாக்கும் வகையில் உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென முதலமைச்சரிடம் வலியுறுத்தினேன் என்றார். வன சரணாலயங்களை விரிவுபடுத்தும் நோக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பல மாநிலங்களை பாதிக்கும். அதேபோல் தமிழகத்தில் நீலகிரி, தேனி போன்ற மாவட்டங்களை பாதிக்கும் என முதலமைச்சருக்கு எடுத்து கூறினேன். எனவே இந்த தீர்ப்பை மீண்டும் பெற, உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்.
அதேபோல், ஒரு புறம் வனங்களில் ஒட்டுமொத்த இயற்கை வளங்களையும் கொள்ளையடிக்கும் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கிவிட்டு மறு வனங்களில் வசிக்கும் பழங்குடியின ஆதிவாசி மக்களை பாதிக்கின்ற நடவடிக்கைகளை மத்திய அரசு ஈடுபடுவதாக அவர் குற்றம்சாட்டினார். வனங்களும் பாதுகாக்கப்பட வேண்டும், பழங்குடி மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

குடியரசு தலைவர் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அதில், எதிர்க்கட்சிகள் ஒத்த கருத்தோடு நின்று செயல்படுற நிலை உருவாகும் என முதலமைச்சர் நம்பிக்கை தெரிவுத்துள்ளார். அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய
தலைமை ஒத்துழைப்பு வழங்கும் என தெரிவித்தோம். கடந்த ஆட்சியில் சிறை மரணங்கள் நிகழும் போது அதை மூடி மறைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்காமல் இருந்த காரணத்தால் அதை எதிர்த்து தீவிர போராட்டங்கள்நடத்த வேண்டிய தேவை இருந்ததாகவும். தற்போது முக ஸ்டாலின் தலைமையிலான அரசு இதுபோன்ற மரணங்கள் நடந்தால் உடனடியாக வழக்கு பதிவு செய்வது சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடுவது போன்ற நடவடிக்கைகளை எடுப்பதாக கே.பாலகிருஷ்ணன் விளக்கமளித்தார்.
– இரா.நம்பிராஜன்







