தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி-க்கள் கூட்டம்!

நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எம்பிக்கள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும்…

நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எம்பிக்கள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது.

18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்து வருகிறது.  நீட்தேர்வு முறைகேடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன. அதன்படி, மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவகாரத்தில் பேசிய ராகுல் காந்தி மத்திய அரசிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தார்.

குறிப்பாக அக்னிவீரர் திட்டம், பாஜகவின் வெறுப்பு அரசியல், அரசின் விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகள் மிரட்டப்படுவது என பல்வேறு விவகாரங்கள் குறித்த கேள்விகளை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று மக்களவையில் எழுப்பினார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதிலளித்து பிரதமர் மோடி இரு அவைகளிலும் இன்று உரையாற்றவுள்ளார்.

இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் பங்கேற்றனர். பிரதமர் மோடி உரையின் போது, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் நேற்று எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, மக்களவையில் பிரதமர் மோடி குறித்தும், அக்னிவீர், ஆர்எஸ்எஸ், பாஜக குறித்தும் ராகுல் காந்தி பேசிய சில கருத்துகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.