டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் மாபெரும் பேரணி – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கையை வலியுறுத்தி அதிமுக சார்பில் வரும் 11ம் தேதி மாபெரும் பேரணி நடைபெறுகிறது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு; மக்களின் அத்தியாவசியத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாதது; பெண்களுக்கு பாதுகாப்பின்மை; கொலை, கொள்ளை, வழிப்பறி என பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று வருவது தொடர்கதையாகிவிட்டது. திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் இவை எதையும் கண்டுகொள்ளாமல் மெத்தனப் போக்கோடு இருந்து வருவது கண்டனத்திற்குரிய விஷயமாகும்.

அந்த வகையில், டாஸ்மாக் நிறுவனத்தில் தமிழ் நாடு முழுவதும் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகளான, பணி நிரந்தரம் செய்வது, போதுமான ஊழியர்கள் நியமனம் செய்யப்படாதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசையும், டாஸ்மாக் நிர்வாகத்தையும் கண்டித்தும்; பணியாளர்கள் நலன் கருதி அவர்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில் 11.2.2026 – புதன் கிழமை காலை 10 மணியளவில், கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி. தங்கமணி, M.L.A., தலைமையில், கழக அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் ஆர். கமலக்கண்ணன் முன்னிலையில், சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து எழும்பூர் டாஸ்மாக் தலைமை அலுவலகம் வரை பேரணியாகச் சென்று கண்டனக் குரல் எழுப்பி, நிர்வாக அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்படும்.

கழக அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில் நடைபெற உள்ள இந்தப் பேரணியில், டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும், அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் இணைந்து செயல்பட்டு வரும் பல்வேறு இணைப்புச் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும், உறுப்பினர்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். பணியாளர்கள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்தப் பேரணியில், டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பணியாளர்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.