சங்கரன்கோவில் தினசரி மலர் சந்தையில் உச்சத்தை தொட்ட மல்லிகை பூ விலை. ஒரு கிலோ முதல் தர மல்லிகை பூ ரூபாய் 4000க்கு விற்பனை செய்யப்பட்டத்து.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள 100 க்கும்
மேற்பட்ட கிராமங்களில் மலர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதி விவசாயிகளால் மல்லிகை பூ, பிச்சிப்பூ, முல்லைப்பூ, கனகாம்பரம்,
செவ்வந்தி, கேந்தி, சேவல், சம்பங்கி உட்பட ஏராளமான மலர்கள் சாகுபடி
செய்யப்பட்டு, சங்கரன்கோவில் தினசரி மலர் சந்தைக்கு கொண்டு வருகின்றனர்.
அங்கு ஏலம் மூலம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த
சந்தையில் இருந்து தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளாவிற்கு அதிகளவு பூக்கள் கொண்டு
செல்லப்பட்டு விற்பனையாகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக முதல் தர மல்லிகை பூ ஒரு கிலோ 1000 ரூபாய் வரை விற்பனையாகி வந்தது. ஆனால் நாளை முகூர்த்த தினம் என்பதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் பனி பொழிவு காலங்களில் குறைவான விளைச்சல் தரக்கூடிய மலர் மல்லிகை என்பதால் தேவைக்கு ஏற்ப பூக்களின் வரத்து இன்று சந்தையில் இல்லை.
இதனால் காலை 8 மணி முதல் தொடங்கி சந்தையில் ஏலம் விடப்பட்ட மல்லிகை பூ இறுதி நேர நிலவரமான 11.30 மணிக்கு ஒரு கிலோ 4000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன் படி 1 கிலோ மல்லிகை பூ ரூபாய் 4000, 1 கிலோ பிச்சி பூ ரூபாய் 1300, 1 கிலோ கனகாம்பரம் ரூபாய் 1000 என விற்பனை செய்யப்படுகிறது. இன்று உயர்ந்த மல்லிகை பூவின் விலையால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.







