மக்களிடையே குடிப்பழக்கத்தை பிரபலப்டுத்தும் வகையில் திட்டம் ஒன்றை ஜப்பான் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்று திருந்தி வாழும் மக்களை ஒரு அரசாங்கமே குடிக்க சொல்லும் வினோத நிகழ்வு நடைபெற்றுள்ளது. சமீப காலமாக குடிப்பழக்கத்தை குறைத்து வரும் ஜப்பானிய இளைஞர்களை குடிக்க ஊக்குவிக்கும் வகையில் புதிய பிரச்சாரத்தை ஜப்பான் அரசாங்கமே கையில் எடுத்துள்ளது.
sake viva என்ற பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ள ஜப்பான் தேசிய வரி அமைப்பு,இளைஞர்களிடையே குடி பழக்கத்தை பிரபலப்படுத்தும் வகையிலான திட்டங்களை கொண்டுவர அறிவுறுத்தியுள்ளது. விளம்பரங்கள், பிராண்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு சம்பந்தப்பட்ட அதிநவீன திட்டங்களைக் கொண்டு வர வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய ஜப்பானிய இளைஞர்கள், அவர்களின் பெற்றோர்களை விட குறைவாக குடிப்பதால் அரசின் வரி வருமானம் குறைந்திருப்பதே இந்த வினோத அறிவிப்பிற்கு காரணமாக கூறப்படுகிறது. 1995ம் ஆண்டு ஒருவர் ஆண்டிற்கு 100 லிட்டர் அளவு மதுவை உட்கொண்டதாகவும் அதுவே தற்போது 75 லிட்டர் அளவிற்கு குறைந்துள்ளதாகவும் அரசு அறிவித்துள்ளது.இதனால் மதுவின் மூலம் கிடைக்கும் வருவாய் 3 சதவீதத்திற்கும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தாக்கத்தால் ஏற்பட்ட வாழ்க்கைமுறை மாற்றமே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இதை மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற அரசு இந்த திட்டத்தை அறிவித்துள்ளது. அரசாங்கமே தன் நாட்டு இளைஞர்கர்களை குடி பழக்கத்திற்கு கொண்டு வருவது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஜப்பானில் இதற்கு எதிர்ப்பும் ஆதரவும் எழுந்துள்ளது. பலர் இந்த திட்டத்தை எதிர்க்கும் வேளையில் சிலர் அரசு அறிவுறித்தியபடி புதிய திட்டங்களை தெரிவிக்க தொடங்கியுள்ளனர்.







