அமெரிக்காவில் செய்தியாளர் சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடியிடம் சிறுபான்மையினர் குறித்து கேள்வி எழுப்பிய அமெரிக்க பெண் பத்திரிகையாளரை சமூக வலைதளங்களில் சிலர் விமர்சித்ததற்கு வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றார். நியூயார்க் மற்றும் வாஷிங்டன் நகரில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த பயணத்தில் மிகவும் முக்கிய நிகழ்வு என்பது பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோபைடன் ஆகியோரின் சந்திப்பாகும்.
இந்த இரு தலைவர்களின் சந்திப்பு கடந்த வியாழக்கிழமை நடந்தது. அன்றைய தினம் பிரதமர் மோடி வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு சென்றார். மோடியை அமெரிக்க அதிபர் ஜோபைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் வரவேற்றனர். அதன்பிறகு வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் இரு தலைவர்களும் பேசினர்.
அதைத்தொடர்ந்து இந்தியா-அமெரிக்கா இடையேயான தொழில், முதலீடு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இருதலைவர்களும் விவாதித்தனர். பிறகு வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அப்போது, வெள்ளை மாளிகைக்கான வால் ஸ்ட்ரீட் இதழின் பத்திரிகையாளர் சப்ரினா சித்திக்கி, இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில், பத்திரிகையாளர் சப்ரினா சித்திக்கி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம், “இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுவதாகவும், அரசை விமா்சிப்பவா்களை வாய் திறக்காமல் செய்வதாகவும் மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் உரிமைகளை மேம்படுத்தவும், பேச்சுரிமையை நிலைநாட்டவும் இந்திய அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்க விரும்புகிறீா்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
இந்தக் கேள்விக்கு பிரதமர் மோடி, ”அதிபா் பைடன் கூறியதுபோல், இந்தியா மற்றும் அமெரிக்காவின் மரபணுவிலும் ஜனநாயகம் உள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜனநாயகம் உள்ளது. இந்தியாவின் முன்னோா்கள் அரசியலமைப்புச் சட்டம் குறித்து எங்களுக்குக் கற்பித்துள்ளனா். அந்த ஜனநாயக கொள்கைகளை இந்திய அரசு பின்பற்றுகிறது. எனவே பாகுபாடுகளுக்கு இந்தியாவில் இடமில்லை” என்று பதிலளித்திருந்தார்.
இதற்கிடையே பத்திரிகையாளர் கேள்வி மற்றும் பிரதமர் மோடி அளித்த பதில் தொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வேகமாக பரவ தொடங்கின. அதேசமயம் பாஜக தொழில்நுட்பக் குழுத் தலைவர் அமித் மாளவியா இந்த விவகாரத்தை பெரும் சர்ச்சையாக்கினார். பெண் பத்திரிகையாளர் சித்திக்கின் கேள்வி பின்னணி கொண்டது என்றும், டூல்கிட் கும்பல் பயன்படுத்துவதைப் போன்றது என்றும், மேலும், பின்னணி கொண்ட இந்த கேள்வியை, பிரதமர் நரேந்திர மோடி தனது பதிலால் தவிடுபொடியாக்கிவிட்டார் என்றும் பதிவிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து, இந்துத்துவா ஆதரவாளர்கள் மற்றும் பாஜக ஆதரவாளர்களின் டிவிட்டர் பக்கங்களில், தொடர்ந்து சபரினா சித்திக்கி குறித்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. சித்திக்கி ஒரு பாகிஸ்தானி இஸ்லாமியவாதி என்றும், இவர் இந்தியாவை குறிவைத்தே கேள்வி எழுப்பினார் என்றும் அவர்கள் கூறுகின்றனர். மேலும் சபரினா சித்திக்கி பாகிஸ்தானிய பெற்றோருக்குப் பிறந்தவர், எனவே அவரது கேள்வி இஸ்லாமியர்களின் கூற்றுகளை எதிரொலிப்பதாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.
சித்திக்கியின் இந்த நிலைக்கு அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தரவுகளின் தொடர்புத்துறை தலைவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பெண் பத்திரிகையாளர் துன்புறுத்தப்படுவது தொடர்பான தகவல்கள் வெள்ளை மாளிகைக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், இது ஏற்றுக்கொள்ளமுடியாதது என்றும், பத்திரிகையாளர்கள் எங்கும், எந்தச் சூழலிலும் துன்புறுத்தப்படுவதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே தான் சப்ரினா சித்திக்கிற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் ஆதரவாக குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர். மேலும் வெளிநாடுகளை சேர்ந்த சில பிரமுகர்களுக்கும் சப்ரினா சித்திக்கிற்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛சப்ரினா சித்திக் நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு பத்திரிகையாளராக சிறப்பாக பணியாற்றி உள்ளீர்கள்” என ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
– திருப்பதி







