கனிமவளப் பாதுகாப்பில் தமிழ்நாடு அரசு கடுமைகாட்டி வரும் நிலையில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக கனிமங்களை ஏற்றிச் சென்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
லிக்னைட் தாது, நாட்டின் மொத்த அளவில் 55.3 சதவீதம் தமிழ்நாட்டில் கிடைக்கிறது. அதேபோல வெர்மிகுலைட் 75 சதவீத அளவுக்கும், டுனைட் 69 சதவீத அளவுக்கும், கார்னெட் 59 சதவீத அளவுக்கும், மோலிபென்டம் 52 சதவீத அளவுக்கும், டைட்டானியம் 30 சதவீதமும் கிடைக்கும் வளம் மிகுந்த மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது.
சேலம் மாவட்டத்தில் அதிக அளவில் கனிமவளங்கள் கிடைக்கின்றன. இங்கு தான் மாக்னஸைட், டுனைட், பாக்ஸைட், சுண்ணாம்பு, இரும்புத்தாது, குவார்ட்ஸ், ஃபெல்ட்ஸ்பார், சோப்ஸ்டோன், கிரானைட்உள்ளிட்டவை அதிக அளவில் கிடைக்கின்றன. அதனால் தான் சேலத்தில் உருக்காலை அமைக்கப்பட்டது.
தாதுவளங்களின் பயன்கள் அனைத்து மக்களுக்கும் பொதுவானவை. இந்த வளங்களை சட்டவிரோதமான முறையில் வெட்டி எடுப்பதும் விநியோகிப்பதும் மக்கள் விரோதச் செயலும் குற்றச் செயலுமாகும். இத்தகைய கனிமவளக் கடத்தல்களைக் கண்காணித்து, அதைக் கட்டுப்படுத்த வேண்டிய பெரும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. அதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
- கனிமவளங்களைப் பாதுகாக்கவும், அவற்றை முறையான அளவில் வெட்டி எடுப்பதன் மூலம் அரசுக்கு உரிய வருவாய் கிடைக்கவும், கனிமவளங்களைப் பிற மாநிலங்களுக்குக் கடத்துவதைத் தடுக்கவும் தமிழ்நாடு அரசு 2011 இல் சட்டம் இயற்றியது.
- தற்போது உரிமம் அளிக்கப்பட்ட குவாரிகளில் வெட்டியெடுக்கப்படும் கனிமவளங்களின் அளவை ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மூலம் கண்காணிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
- கனிமவளங்களைப் பாதுகாக்கவும், கனிம வளச் சுரங்கங்கள் அமைந்துள்ள பகுதிகளின் மேம்பாட்டுக்காகவும், அப்பகுதிகளில் நலத்திட்டங்களைச் செயல்படுத்தவும் ரூ.1,224.87 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
- கடந்த ஏப்ரல் மாதம் நிலவியல் மற்றும் கனிமவளத்துறை ஆணையர் கன்னியாகுமரி, தென்காசி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள 38 சுங்கச்சாவடிகளில் திடீர் ஆய்வுகளை மேற்கொள்ள சிறப்புக் குழுக்களை நியமித்தார். இந்தச் சிறப்புக் குழுக்கள் மாநில எல்லையைத் தீவிரமாகக் கண்காணித்து, தங்களது அறிக்கையைத் தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களுக்கு உடனடியாக அளிக்கவும் உத்தரவிட்டிருந்தார்.
- மாநில எல்லைகளில் அமைந்துள்ள மேற்கண்ட நான்கு மாவட்டங்களிலும் கனிமவளங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களைக் கண்காணிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. மேலும், இதர மாவட்டங்களிலும் கனிமவளங்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்களைக் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டது.
- கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏப்ரல் முதல் ஜூன் 25, 2023 வரை அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக கனிமங்களை ஏற்றிச் சென்ற 431 வாகனங்கள் பறக்கும் படை மற்றும் காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டு ரூ.1,76,93,348/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்டவிரோதமாக கனிமங்களை ஏற்றிச்சென்ற 77 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 39 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக கனிமங்களை ஏற்றிச் சென்ற 39 வாகனங்கள் பறக்கும்படை மற்றும் காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டு ரூ.16,34,100/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்ட விரோதமாக கனிமங்களை ஏற்றிச் சென்ற 105 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 69 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- கோயம்புத்தூர் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக கனிமங்களை ஏற்றிச்சென்ற 72 வாகனங்கள் பறக்கும்படை மற்றும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டு ரூ.24,21,000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்ட விரோதமாக கனிமங்களை ஏற்றிச்சென்ற 17 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- தேனிமாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக கனிமங்களை ஏற்றிச் சென்ற 10 வாகனங்கள் பறக்கும்படை மற்றும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டு ரூ.3,80,000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்டவிரோதமாக கனிமங்களை ஏற்றிச்சென்ற 17வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- திருநெல்வேலி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாகவும், சட்டவிரோதமாகவும் கனிமங்களை ஏற்றிச்சென்ற 48வாகனங்கள் பறக்கும்படை மற்றும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- தென்காசி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக கனிமங்களை ஏற்றிச்சென்ற 27 வாகனங்கள் பறக்கும்படை மற்றும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டு ரூ.9,08,480/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்டவிரோதமாக கனிமங்களை ஏற்றிச்சென்ற 24வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கனிமங்களை ஏற்றிச்சென்ற 49 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குகள் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளன.
- மேலும், இதர மாவட்டங்களிலும் விதிகளை மீறும் வாகன உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிந்திடவும், வாகன ஓட்டுநர்களின் உரிமத்தை ரத்து செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில், அதேசமயம் தாதுவளங்களின் மூலமாகக் கிடைக்கும் வருவாய் அனைத்து மக்களுக்கும் பயன்தரும் வகையில்தான் கனிமவளங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதிபூண்டுள்ளது.
இவ்வாறு தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







