நடிகை சமந்தாவுக்கு ஆந்திராவில் ரசிகர் ஒருவர் தனது வீட்டிலேயே கோயில் கட்டியுள்ள நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இக்கோயில் நாளை திறக்கப்படவுள்ளது.
தமிழ் திரையுலகில் பாணா காத்தாடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சமந்தா. தற்போது பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருவதோடு, இந்திய திரையுலகில் முண்ணனி நடிகைகளில் ஒருவராகவும் தம்மை நிலைநிறுத்திக் கொணடார். இவருக்கு தமிழில் மட்டுமல்ல உலகம் முழுவதும் ரசிகர்கள் ஏராளம்.
அந்த வகையில், திரையுலக ரசிகர்கள் நடிகைகளை திரையில் மட்டுமல்ல, நேரிலும் கொண்டாடி தீர்க்க தவறுவது இல்லை. அதிலும் நடிகைகளுக்கு கோவில் கட்டுவது என்பது புதிது ஒன்றும் அல்ல. தமிழ் திரையுலகில் ஏற்கனவே நடிகைகள் குஷ்பூ, நயன்தார, நிதி அகர்வால் ஆகியோருக்கு கோவில் கட்டியுள்ளனர். அந்த வரிசையில் தற்போது நடிகை சமந்தாவும் இணைந்துள்ளார்.
நடிகை சமந்தாவுக்கு ஆந்திராவில் பெருமளவில் ரசிகர் கூட்டம் உள்ளது. இந்நிலையில், குண்டூர் அருகே உள்ள பாபட்லா மாவட்டம், அலபாடு கிராமத்தை சேர்ந்த சந்தீப் எனும் ரசிகர், வீட்டில் ஒரு பகுதியை ஒதுக்கி சமந்தாவுக்கு கோயில் கட்டி வருகிறார். அதற்கான திறப்பு விழா நாளை நடைபெறுகிறது.
இது குறித்த புகைப்படங்களை பகிர்ந்து கருத்து தெரிவித்துள்ள சந்தீப், நடிகை சமந்தா நடிப்பில் மட்டுமல்ல தொண்டு செய்வதிலும் என்னை மிகவும் கவர்ந்துள்ளார். அவர் பிரத்யூஷா என்ற அறக்கட்டளையை உருவாக்கி, அதன் மூலம் அவர் பல சேவைகளை செய்து வருகிறார். இதனால் அவர் மீது மதிப்பும், மரியாதையும் கூடியது. அதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் அவருக்கு கோயில் கட்ட முடிவு செய்தேன். அதன்படி தற்போது இந்த கோவிலை கட்டி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் நடிகை சமந்தாவின் கோவில் மற்றும் அவருடைய சிலை குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
- பி.ஜேம்ஸ் லிசா










