குப்பையில் கிடந்த பாட்டிலுக்காக முற்றிய தகராறு – புதுச்சேரியில் நேர்ந்த துயரம்!

புதுச்சேரியில் குப்பை எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை கொலை செய்த குப்பை எடுக்கும் தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

புதுச்சேரி மாநிலம் பாகூர் தொகுதிக்குட்பட்ட ஆராய்ச்சிகுப்பம் வாய்க்காலில் நேற்று காலை அடையாளம் தெரியாத 40 வயதுள்ள நபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதைப்பார்த்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பாகூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடதிற்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுகாக அனுப்பி வைத்து விசாரணை செய்தனர்.

அதில் ஆராய்ச்சிக்குப்பம் வயல்வெளி சுற்றி சில மதுபான கடைகள் உள்ளதால், அங்கு மது அறுந்துபவர்கள் காலி பாட்டில்களை அங்கே வீசி விட்டு செல்லும் நிலையில் அதனை சிலர் எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இறந்து கிடந்தவர் குப்பையில் இருந்து பாட்டில்களை எடுக்கும் தொழில் செய்து வந்தவர் என்றும், அவரும் மணப்பட்டு பகுதியை சேர்ந்த நந்தகுமாரும் மது போதையில் அடித்து கொண்டதாக அப்பகுதியில் சிலர் தெரிவித்திருந்தனர்.

இதனை அடுத்து நந்தகுமாரை காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை செய்ததில், நந்தகுமார் சேகரித்து மூட்டையில் வைக்கும் பாட்டில் மற்றும் குப்பைகளை அந்த நபர் எடுத்து சென்று கடையில் எடைக்கு போட்டு விடுவதாகவும், இது குறித்து அவர் அந்த நபரிடம் கேட்ட போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் அடித்து கொண்டு அருகிலிருந்த வாய்க்காலில் அந்த நபரின் தலையை முக்கி அமுக்கி விட்டு நந்தகுமார் தப்பிச் சென்றது தெரியவந்தது.

தொடர்ந்து நந்த குமாரை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை நீதிபதி முன் ஆஜர்ப்படுத்தி காலாபட்டு மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து கொலையான நபர் இதுவரை யார் என்பது தெரியாத நிலையில், அவர் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.