விழுப்புரம் அருகே பனைத் தொழிலாளர்கள் மீது சாராயம் விற்றதாக வழக்குப் பதிவு செய்ததைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூரை அடுத்த பூரி குடிசை பகுதியில் 700க்கும் மேற்பட்ட பனையேறி குடும்பங்கள் தலைமுறைகளாகப் பதநீர் இறக்குதல், கருப்பட்டி செய்தல், பனை ஓலை பொருட்கள் பின்னுதல் போன்றவற்றை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள், கள் இறக்குவதற்குத் தமிழ்நாடு அரசு தடையை நீக்க வேண்டும் எனப் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு நிதி நிலை அறிக்கையிலும் பனை மேம்பாட்டிற்காக 2 கோடியே 65 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து பதநீர் இறக்கி விற்பனை செய்ய வலியுறுத்தியுள்ளது.
ஆனால் பூரி குடிசை பகுதியில் கஞ்சனூர் போலீசார், கள் இறக்கி சந்தைப்படுத்தும் பனையேறிகள் மீது மதுவிலக்கு சட்டத்திற்குப் புறம்பாக சாராய வழக்குகள் போட்டு வருவதாகவும், அநியாயமாக பாஸ்கர் என்னும் பனையேறி ஒருவர் மீது சாராய வழக்குப் போட்டு கைது செய்துள்ளாதவும் தெரிவித்தனர். மேலும் அவர் மீது போடப்பட்ட சாராய வழக்கினை திரும்பப் பெறக்கோரி பனையேறிகள் தங்களது குடும்பங்களுடன் ஆட்சியர் அலுவலகம் முன்பு உடைக்கப்பட்ட பதநீர் பானைகளைக் கொட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பனையேறிகள் பதநீர் இறக்குகிறார்களா அல்லது கள் இறக்குகிறார்களா என்று கூட உறுதிப்படுத்தாமல் போலீசார் அவர்களின் பனை மரத்திலுள்ள பானைகளை அடித்து உடைப்பதாக வேதனை தெரிவித்தனர். மேலும் இதனைத் தமிழ்நாடு அரசு கருத்தில் கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கள் இறக்கி சந்தைப்படுத்த அரசு அனுமதியளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.








