தமிழர் வாழ்வின் அங்கமாகவும் அடையாளமாகவும் திகழ்பவை கற்பக விருட்சம் என போற்றப்படும் பனைமரங்கள். உலகின் முதல் தாவரமே பனைமரம் தான் என ஒருதரப்பு அறிவியல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதற்கு, கடும் வறட்சியிலும் தளராமல் வளரும் தன்மை, வேறெந்த தாவரத்தை விட பனைமரத்திற்கே அதிகம் என்பதையும், ஏராளமான நாடுகளில் பரவலாக வளர்வதையும் சுட்டிக் காட்டுகின்றனர்.
நம் நாட்டிலேயே அதிகளவிலான பனைமரங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. மாநிலத்தின் மரமாக பனைமரம் உள்ளது. ஒரு மரத்தின் அத்தனை பகுதிகளும் பயன்தரும் என கூறினால், அது பனைமரத்திற்கே முழுமையாக பொருந்தும். ஆம். பதநீர், நுங்கு, பனங்கிழங்கு, பனம்பழம், பனைவெல்லம், பனவோலை என மனிதனுக்கு சகல விதத்திலும் பயன்தரும்.
தமிழர் வரலாற்றோடும் தமிழ் மொழியோடும் நெருங்கிய தொடர்பு பனைமரங்களுக்கு உண்டு. திருக்குறள் மட்டுமின்றி சிலப்பதிகாரம் உள்ளிட்ட, தமிழருக்கு பெருமை தரும் சங்க இலக்கியங்கள் பனைவோலையில் தான் எழுதப்பட்டன. தமிழ்நாட்டின் மாநில மரமாகவும் திகழும் பனைமரங்கள், தென் மாவட்டங்களில் தான் அதிகம் காணப்படுகின்றன.
தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளுக்கு முன்பு 30 கோடி பனைமரங்கள் இருந்த நிலையில், அவற்றை பாதுகாக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படாததால், சுமார் 25 கோடி மரங்கள் பல்வேறு காரணங்களால் அழிந்துவிட்டன. தற்போது 5 கோடி பனைமரங்களே எஞ்சியிருக்கின்றன. இத்தகைய சூழலில், தமிழ்நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க முதல் வேளாண் பட்ஜெட்டில், பனைமரங்களை பாதுகாக்க பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. பனைத்தொழில் சார்ந்த விவசாயிகளிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக பனைமரத்தை வெட்ட வேண்டும் என்றால், மாவட்ட ஆட்சியரின் அனுமதி தேவை என்ற கட்டுப்பாடு, பனைமரங்களை இனி அழிவின் விளிம்பிலிருந்து மீட்டெடுக்கும் சூழலை உருவாக்கியுள்ளது என்றே கூறலாம்.
முந்தைய திமுக ஆட்சியில், தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர் வாரியத்தின் தலைவராக குமரி அனந்தன் நியமிக்கப்பட்ட நிலையில், பதநீரை டெட்ரா பாக்கெட்டில் அழகுற அடைத்து, நகரங்களில் வர்த்தக ரீதியாக விற்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர், அதன் விநியோகம் குறைந்தது. அதன் பின்னணியில், பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களின் தலையீடும் நெருக்கடியும் இருந்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
நம் கிராமங்களிலும் சாலை ஓரங்களிலும் 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நுங்கு, அமெரிக்காவில் ஐஸ் ஆப்பிள் என்ற பெயரில், இந்திய மதிப்பில் சுமார் 75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுபோல், பனைவோலையால் செய்யப்படும் கைவினைப் பொருட்களுக்கு, வெளிநாடுகளில் நல்ல சந்தை மதிப்பு உள்ளது. நம்மூரிலேயே கருப்பட்டி கிலோ 400 ரூபாய் என்றளவில் விற்கப்படுகிறது. தற்போதைய சூழலில், பனைபொருட்களின் விற்பனை மூலம், ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் மட்டுமே அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. ஆனால், ஒரு பனைமரம் மூலம் ஆண்டுக்கு குறைந்தது 10,000 ரூபாய் வருவாய் கிடைக்கும். அந்த வகையில், 5 கோடி பனைமரங்கள் மூலம், தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், பனைமரங்கள் மூலம் கிராமப் பொருளதாரமும் உயரும் என்பதுடன், கிராமத்தில் இருந்து மக்கள் வாழ்வாதாரத்திற்காக நகரம் நோக்கி நகர்வதும் குறையும் என்றும் கூறப்படுகிறது.
பனைமரத்தின் வேர்கள் நிலத்தடி நீரை வற்றவிடாமல் தக்கவைக்கும் தன்மை கொண்டது. இதனால் தான் நீர்நிலைகளின் கரையோரங்களில், நம் முன்னோர்கள் பனைமரங்களை நட்டு வைத்தனர். அந்தவகையில், நீர்வளத்தையும் மண்வளத்தையும் காக்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட்டில், 76 லட்சம் பனை விதைகளையும், ஒரு லட்சம் பனங்கன்றுகளையும் முழு மானியத்தில் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது, விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
கட்டுரையாளர்: ஆர்.கே.மணிகண்டன்









