கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில், படுக்கை கிடைக்காததால், 4 மணி நேரத்திற்கும் மேலாக ஆம்புலன்ஸ் வாகனத்தில் காத்திருந்த நோயாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. அம்மாவட்டத்தில், தற்போது 7,444 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 173 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 2,144 படுக்கைகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் 1,438 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி கொண்டதாகவும், 139 படுக்கைகள் ஐ.சி.யு படுக்கையாகவும் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் கிருஷ்ணகிரி ராஜாஜி நகரை சேர்ந்தவர் 34 வயதான பிரேம் குமார். இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 5 நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அங்கு மேல் சிகிச்சைக்கான வசதி இல்லாததால், அவரை அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
காலை 8 மணிக்கு மருத்துவமனைக்கு வந்த அவர், படுக்கை கிடைக்காததால், 4 மணிநேரத்திற்கும் மேலாக ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே காத்திருந்துள்ளார். ஆம்புலன்ஸ வாகனத்தில் இருந்த ஆக்சிஜன் தீர்ந்ததால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7,444 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அம் மாவட்டத்தில், 1,438 படுக்கைகள் மட்டுமே ஆக்சிஜன் வசதியுடன் இருப்பதாகவும், இதனால், உயிரிழப்புக்கள் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.







