தேவையற்ற செலவு செய்த கல்லூரி மாணவி, சைபர் க்ரைம் குற்றவாளிகளிடம் சிக்கி, 16 லட்சம் ரூபாயை இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் பிரங்கிபுரத்தை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவி தனது தந்தையின் ஏடிஎம்ஐ பயன்படுத்தி அவ்வப்போது 80 ஆயிரம் ரூபாய் வரை பணத்தை எடுத்து செலவு செய்துள்ளார். இதனை தனது தந்தை கண்டுபிடித்து திட்டுவதற்குள் எப்படியாவது சம்பாதித்து வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என எண்ணி உள்ளார். அதற்காக ஆன்லைனில் வேலை தேடி வந்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது சிறுநீரகம் நன்கொடை அளித்தால் பணம் தருவதாக வந்த லிங்கை பார்த்து அதில் கேட்கப்பட்ட விவரங்களை பதிவு செய்துள்ளார். இறுதியில் தனது சிறுநீரகத்தை நன்கொடை அளிப்பதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து ஆன்லைனில் கல்லூரி மாணவியை தொடர்பு கொண்ட மர்மநபர்கள் நன்கொடை அளித்தால் அறுவை சிகிச்சைக்கு முன்பு 3 கோடி ரூபாயும் சிகிச்சைக்கு பின்னர் 3 கோடி ரூபாயும் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை கல்லூரி மாணவியும் உண்மை என நம்பி உள்ளார்.
பின்னர் சென்னை கிளையை சேர்ந்த சிட்டி வங்கியில் கல்லூரி மாணவி பெயரில் அவர்களே போலியாக வங்கி கணக்கை தொடங்கி அதில் 3 கோடி ரூபாய் செலுத்தி உள்ளதாக கூறியுள்ளனர். இதற்காக போலி வங்கி கணக்கை கல்லூரி மாணவியின் வாட்ஸ்அப்பிற்கு அனுப்பி உள்ளனர். ஆனால் இந்த பணம் எடுக்க வேண்டும் என்றால் போலீஸ் கிளியரன்ஸ் சான்றிதழ், பல்வேறு வரி செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர். அவர்கள் சொன்னதை உண்மை என நம்பிய கல்லூரி மாணவி தனது தந்தை வீடு கட்டுவதற்காக ₹20 லட்சம் ரூபாய் வைத்திருந்த வங்கி ஏ.டி.எம். பயன்படுத்தி ஆன்லைன் மோசடியாளர்கள் கூறிய வங்கிகளில் 16 லட்சம் ரூபாய் வரை செலுத்தி உள்ளார்.
இந்நிலையில் மாணவியின் தந்தை வங்கியில் பணம் எடுக்க சென்ற போது வங்கி கணக்கில் 4 லட்சம் ரூபாய் மட்டும் இருப்பதாகவும் மற்ற பணத்தை பயன்படுத்தி விட்டதாகவும் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தந்தை மாணவிக்கு போன் செய்து உடனடியாக வீட்டிற்கு வரும்படி கூறினார். இதனால் பயந்து போன மாணவி தனது தோழி வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின்னர் ஆன்லைன் மோசடியாளர்களை தொடர்பு கொண்ட மாணவி தான் சிறுநீரகம் விற்கவில்லை. தனது பணத்தை திருப்பித் தரும்படி கேட்டுள்ளார். அதற்கு ஆன்லைன் மோசடியாளர்கள் டெல்லி வரும்படி கூறியுள்ளனர். இதையடுத்து அவர்கள் சொன்ன முகவரிக்கு சென்று பார்த்த போது அங்கு யாரும் இல்லாததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாணவி சொந்த ஊருக்கு திரும்பினார்.
பணம் கேட்டதால் மகள் வேறு எங்காவது சென்று விட்டாளோ என எண்ணி தனது மகளை காணவில்லை என கன்சிகசெர்லா காவல் நிலையத்தில் மாணவியின் தந்தை புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் செல்போன் எண்ணை வைத்து மாணவி இருக்கும் இடத்தை அறிந்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து, நடந்த விவரங்களை கேட்டறிந்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். தனது தந்தையுடன் குண்டூர் எஸ்.பி. அலுவலகத்தில் நடைபெற்ற குறைத்தீர்வு கூட்டத்தில் பங்கேற்ற கல்லூரி மாணவி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.ஆரிப் ஹபீஸிடம் புகார் மனு அளித்தார்.
தேவையற்ற முறையில் செலவு செய்த 80,000 ரூபாய்க்காக, சிறுநீரகத்தை விற்க ஆன்லைனில் தேடி சென்று, சைபர் குற்றவாளிகளிடம், தந்தை வங்கியில் வைத்திருந்த 16 லட்சம் ரூபாயை இழந்த சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.