ராஜபாளையம் அருகே, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீப் பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள கோபாலபுரத்தை சேர்ந்தவர்
அந்தோணி ராஜ். ஜேசிபி உரிமையாளரான இவர் சத்திரப்பட்டி சாலையில், வஉசி
நகரில் தனது பொக்லைன் வாகனத்தை நிறுத்தி உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு
முன்னதாக இவரது சொகுசு கார் பழுதானதால், பொக்லைன் வாகனத்தின் அருகே
சாலையோரம் காரையும் நிறுத்தி இருந்தார்.
நேற்று பகலில் கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு அருகே உள்ள காலி நிலத்தில்,
வளர்ந்திருந்த புற்களில் அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்ததாக கூறப்படுகிறது.
பக்கம் எரிந்து கொண்டிருந்த தீ, அருகே நின்று கொண்டிருந்த காரின் டயரிலும்
பற்றியுள்ளது. இதை பார்த்தவர்கள் தீயை கட்டுப்படுத்த முயன்றுள்ளனர். முடியாது
போகவே, தீ அணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் விரைந்து வந்த மீட்பு குழுவினர், சுமார் அரை மணி நேரம் போராடி
தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் அதற்குள் காரின் பின் பகுதி முழுவதும்
எரிந்து சேதமானது. இந்த விபத்தில் காரில் இருந்த சுமார் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள
பொருட்கள் எரிந்து சேதமாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து
காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காரில் ஏற்பட்ட தீ
விபத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.







