கோவில்பட்டி வியாபாரி ஒருவர் தனது சொந்த முயற்சியில் சூரிய சக்தியில் ஓடும் மூன்று சக்கர வாகனத்தை உருவாக்கி அசத்தியுள்ளார்.
கோவில்பட்டியைச் சேர்ந்த செல்வகுமாருக்கு ஊதுபத்தி, சாம்பிராணி மூலப் பொருட்களை கடை, கடையாக விற்பனை செய்வது தான் தொழில். இரு சக்கர வாகனத்தில் இந்த வியாபாரத்தைச் செய்து வந்த அவருக்கு எரிபொருள் விலை உயர்வு பெரிய சோதனையாக அமைந்தது. கடின உழைப்பில் கிடைத்த சொற்ப வருமானத்தையும் அவர் பெட்ரோலுக்கே செலவிட வேண்டியிருந்ததால் அவரது குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கத் தொடங்கியது. அதனால் பெட்ரோலுக்கு ஆகும் செலவைக் குறைக்க அவர் மாற்று வழிகளை ஆராயத் தொடங்கினார். அதன்பயனாக அவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து சொந்த முயற்சியில் சூரிய சக்தியில் ஓடும் மூன்று சக்கர வாகனத்தை உருவாக்கியதாக செல்வகுமார் தெரிவிக்கிறார்.
செல்வக்குமார் வடிவமைத்துள்ள புதிய மூன்று சக்கர வாகனம் சூரிய ஒளியில் 30 கிலோமீட்டர் வேகத்திலும் பேட்டரி இயக்கத்தில் 40 கிலோ மீட்டர் வேகத்திலும் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 500 கிலோ எடை வரை எடுத்துச் செல்லும் ஆற்றல் கொண்ட இந்த சூரிய சக்தி வண்டி சாலைகளில் கம்பீரமாக உலா வருகிறது.
இந்த சூரிய சக்தி வாகனம் மூலம் எரிபொருளுக்கு மாதந்தோறும் செலவிட்ட ஆறாயிரம் ரூபாய் மிச்சமாவதாக செல்வக்குமாரும் அவரது மனைவி காளீஸ்வரியும் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர். பிரச்சனைகளை பற்றி மட்டுமே சிந்திக்காமல் அதற்கான தீர்வையும் கண்டுபிடித்த செல்வக்குமாரை ஒரு முன்னுதாரண வியாபாரி என்றே கூறலாம்







