கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை செப்டம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி கொள்ளை முயற்சி…

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை செப்டம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி கொள்ளை முயற்சி நடைபெற்றது. இதில், எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்குத் தொடர்பான விசாரணை உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக 5 தனிப்படை போலீஸார் மறு விசாரணை நடத்தினர். இவ்வழக்கு தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சயான், வாளையார் மனோஜ், உதயகுமார், ஜித்தின் ஜாய் ஆகிய நான்கு பேர் மட்டும் இன்று ஆஜராகினர்.

வழக்கு விசாரணையின் போது அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் ஆஜராகி தற்போது வரை கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தனிப்படை போலீசார் 303 நபர்களிடம் இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி உள்ளதாக தெரிவித்தார். மேலும், தகவல் தொழில்நுட்பக் கருவிகளின் உதவியுடன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் மேலும் பலரிடம் விசாரணை நடைபெற இருப்பதால் கூடுதல் அவகாசம் தேவை எனவும் கூறினார்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி முருகன் வழக்கு விசாரணையை செப்டம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.