பெங்களூரில் உள்ள பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபேயில் வெடித்தது வெடிகுண்டுதான்! சிசிடிவி காட்சி வெளியானது!

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபேயில் வெடித்தது வெடிகுண்டுதான் என கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதி செய்த நிலையில், சிசிடிவி காட்சியும் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. பெங்களூரில் ராமேஸ்வரம் கஃபே…

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபேயில் வெடித்தது வெடிகுண்டுதான் என கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதி செய்த நிலையில், சிசிடிவி காட்சியும் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

பெங்களூரில் ராமேஸ்வரம் கஃபே பிரபலமான உணவகம். இதன் ஒயிட் லீட் கிளையானது 80 அடி சாலையில் அமைந்துள்ளது. இந்த கிளையில் இன்று (01.03.2024) பிற்பகல் திடீரென மர்ம பொருள் வெடித்தது. இதில் 3 உணவக ஊழியர்கள் மற்றும் ஒரு பெண் என மொத்தம் 4 பேர் படுகாயமடைந்தனர்.

இதனிடையே ராமேஸ்வரம் கஃபே உரிமையாளரான திவ்யா ராகவேந்திரா கூறுகையில், கை கழுவும் இடத்தில்தான் அடுத்தடுத்து இரு முறை மர்ம பொருள் வெடித்தது. அங்கு சிலிண்டர்கள் எதுவும் வைக்கப்படவில்லை. அடையாளம் தெரியாத ஒரு நபர் பை ஒன்றை வைத்துவிட்டுச் சென்றதாக பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். போலீசாரின் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு தந்து வருகிறோம் என்றார். மேலும் மர்ம பொருள் வெடித்தது தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ.வின் அதிகாரிகளும் ராமேஸ்வரம் கஃபேவுக்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இச்சூழலில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா, ராமேஸ்வரம் கஃபேயில் வெடித்தது வெடிகுண்டுதான் என தெரிவித்துள்ளார். மேலும் இத்தகைய விஷம செயலில் ஈடுபட்ட நபரை கண்டுபிடித்து தண்டிப்போம். பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில், உணவகத்தில் இருந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அதில் குண்டு வெடித்து சிதறுவதும், அங்குள்ள ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் பதறியடித்து ஓடுவதும் பதிவாகியுள்ளது.

அந்த சிசிடிவி காட்சியை முழுமையாக காண கீழே உள்ள காணொலியை காணவும்:

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.