ஆசிய பாரா விளையாட்டில் ஹாட்ரிக் பதக்கங்கள் – துளசிமதிக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!

ஆசிய பாரா விளையாட்டில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ள, துளசிமதி முருகேசனுக்கு, முதல்வர் விஜய் வாழ்த்துக்களை தெரிவித்து, உயரிய ஊக்கத்தொகைகளை அறிவித்துள்ளார்.

ஜப்பானின் ஆய்ச்சி – நகோயா நகரில் 2026-ம் ஆண்டுக்கான ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்று வருகின்றனர். பேட்மிண்டன் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை வென்று மாநிலத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

குறிப்பாக துளசிமதி முருகேசன் இன்று ஒரு நாளில், பேட்மிண்டன் போட்டிகளின் வெவ்வேறு பிரிவுகளில் மூன்று பதங்களை வென்றுள்ளார். அதில், ஒரு தங்கம் மற்றும் இரண்டு வெள்ளிப்பதக்கங்கள் அடங்கும். ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக அவருக்கு ரூ. 50 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் என இன்று காலையில் அறிவிக்கப்பட்டது.

துளசிமதி முருகேசனுக்கு பேட்மிண்டன் போட்டிகளின் இருவேறு பிரிவுகளில் இன்று இறுதிச்சுற்று போட்டிகள் இருந்தன. அவ்விரு போட்டிகளிலும் அவர் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். மேலும் அவரின் இவ்விரு வெற்றிகளுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துள்ள முதலமைச்சர் விஜய், அதற்கான ஊக்கத்தொகைகளையும் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “ ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பேட்மிண்டன் விளையாட்டில், பெண்கள் இரட்டையர் SL3-SU5 பிரிவில் தங்கப் பதக்கமும், கலப்பு இரட்டையர் SL3-SU5 பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்ற இந்திய அணிகளுக்கும், அவ்வணிகளில் இடம்பெற்றிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்!

வீராங்கனை துளசிமதி முருகேசனின் சாதனைகளைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.1.25 கோடி உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அவர், இதுவரை மூன்று பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார். அவரது தொடர் வெற்றி, சாதிக்கத் துடிக்கும் இளம் தலைமுறையினருக்கு புதிய நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளிக்கிறது. அவரைப் போன்ற திறமைமிக்க அனைத்து விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குத் தமிழ்நாடு அரசு என்றும் உறுதுணையாக நிற்கும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், மொத்தமாக துளசிமதிக்கு ரூ.1 கோடியே 75 லட்சம் ஊக்கத் தொகையாகக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.