தும்பிக்கை இல்லாமல் திரியும் குட்டி யானை – சிகிச்சை அளிக்க வன ஆர்வலர்கள் கோரிக்கை..!

கேரள மாநிலம் அதிரப்பள்ளி வனப்பகுதியில் தும்பிக்கை இல்லாமல் திரியும் குட்டி யானைக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை அளிக்க வனத்துறையினர் முன்வர வேண்டும் என்று வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கேரள மாநில வனப்பகுதியில் ஏராளமான…

கேரள மாநிலம் அதிரப்பள்ளி வனப்பகுதியில் தும்பிக்கை இல்லாமல் திரியும் குட்டி யானைக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை அளிக்க வனத்துறையினர் முன்வர வேண்டும் என்று வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேரள மாநில வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் அதிரப்பள்ளி ஏழாட்டுமுகம் வனப்பகுதியில் 4 வயது மதிக்கத்தக்க குட்டியானை ஒன்று கடந்த சில மாதங்களாக தும்பிக்கையின்றி சுற்றி திரிந்து வருகிறது. அந்த குட்டி யானையை 4 முறை பொதுமக்கள் பார்த்துள்ளனர். கடந்த ஜனவரி மாதத்தில் இதே குட்டி யானை அதிரப்பள்ளி எண்ணெய்ப்பனை தோட்டத்தில் ஐந்து யானைகள் கொண்ட கூட்டம் நுழைந்துள்ளது. அப்போது தும்பிக்கை இல்லாத குட்டி யானையை வனத்துறையினர் பார்த்துள்ளனர். அதன் பிறகு தற்போது சில நாட்களாக மீண்டும் இந்த பகுதியில் திரிந்து வருகிறது.

இதற்கு முன் பார்த்ததைவிட தற்போது அந்த யானை மிகவும் சோர்வான நிலையில் திரிவதாக கூறப்படுகிறது. அந்த யானைக்கு தும்பிக்கை இல்லாமல் இருப்பதால் மற்ற யானைகளை போன்று அனைத்து உணவுகளையும் வழக்கம்போல் உண்ண முடியாத நிலையில் இருக்கலாம் எனவும், அதன் காரணமாக அந்த யானை உடல்நிலை மோசமடைந்து சோர்வாக காணப்படலாம் என்றும் யானை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால் அந்த குட்டி யானைக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை அளிக்க வனத்துறையினர் முன்வர வேண்டும் என்று வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.