ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு கடந்து வந்த பாதை…

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதித்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் ராகுல் காந்தி மீதான வழக்கு கடந்து வந்த பாதை குறித்து காணலாம்… தேர்தல் பரப்புரையில்…

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதித்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் ராகுல் காந்தி மீதான வழக்கு கடந்து வந்த பாதை குறித்து காணலாம்…

தேர்தல் பரப்புரையில் ராகுல் காந்தியில் பேச்சு:

2019-ல் நடந்த மக்களவைத் தேர்தல் பரப்புரையின் போது கர்நாடக மாநிலம் கோலாரில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “எல்லா திருடர்களின் பெயரும் மோடி என்றே முடிவது ஏன்?” என்று விமர்சித்தார். இது தொடர்பாக குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி, சூரத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.

குற்றவாளி என தீர்ப்பு – மார்ச் 23, 2023: 

ராகுல்காந்திக்கு எதிரான அவதூறு வழக்கை விசாரித்த சூரத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம், மார்ச் 23-ம் தேதி ராகுல் காந்தி குற்றவாளி என அறிவித்ததுடன் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது.

தகுதியிழப்பு – மார்ச் 24, 2023:

மேல்முறையீடு செய்வதற்கு 1 மாதம் அவகாசத்தை நீதிமன்றம் அளித்திருந்தும், அவசர அவசரமாக ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை தகுதிநீக்கம் செய்து மக்களவைச் செயலகம் அறிவித்தது.

சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு – ஏப்ரல் 20, 2023:

சூரத் பெருநகர மாஜிஸ்திரேட் வழங்கிய தீர்ப்பிற்கு இடைக்கால தடை கோரி சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தை ராகுல் காந்தி அணுகினார். ஆனால் அந்நீதிமன்றம் அவரின் மனுவை நிராகரித்தது. மேலும் எம்.பி.யாகவும், நாட்டின் இரண்டாவது பெரிய கட்சியின் தலைவராகவும் இருந்த நபர் மிகவும் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்று சூரத் செஷன்ஸ் நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.

குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு – ஏப்ரல் 25, 2023: 

சூரத் செஷன்ஸ் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். குஜராத் உயர்நீதிமன்ற விடுமுறைக் கால அமர்வு இந்த மனுவை விசாரித்த போது இடைக்கால நிவாரணம் வழங்குவதற்கு வாய்ப்பிலை என்று கூறியதோடு கோடை விடுமுறைக்குப் பின்னர் இதன் மீதான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தது.

ராகுல் காந்தி மீது அடுத்தடுத்து தொடரப்பட்ட வழக்குகள்:

பாட்னாவில் வழக்கு: சூரத்தில் புர்னேஷ் மோடி தொடர்ந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்தி தண்டிக்கப்பட்ட நிலையில் ராகுல் மீது மேலும் பல அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மாநிலங்களவை எம்.பி. சுஷில் குமார் மோடி பாட்னா உயர் நீதிமன்றத்தில் ஒரு கிரிமினல் அவதூறு வழக்கைத் தொடந்தார்.

ஜார்க்கண்ட் நீதிமன்றத்தின் உத்தரவு: வழக்கறிஞர் பிரதீப் மோடி என்பவர் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் ஓர் அவதூறு வழக்கைத் தொடர்ந்தார். இதில் ஜூலை 4 ஆம் தேதி நீதிமன்றம் ஓர் உத்தரவைப் பிறப்பித்தது. அதில் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வழக்கு அடுத்த விசாரணைக்கு வரும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று உத்தரவிட்டது.

ஜூலை 7, 2023: தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சூரத் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற ராகுல் காந்தியின் கோரிக்கையை குஜராத் உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

நீதிபதியின் கண்டனம்: தீர்ப்பை வழங்கிய நீதிபதி ஹேமந்த் பிரச்சக், “இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போதே ராகுல் காந்திக்கு எதிராக மேலும் பல வழக்குகள் தாக்கலாகின. அதில் ஒன்று வீர் சாவர்க்கரின் பேரன் தாக்கல் செய்த வழக்கு. எனவே, தண்டனை என்பது நிச்சயமாக அநீதி அல்ல. தீர்ப்புக்கு இடைக்கால தடை வழங்க வேண்டும் என்பதும் விதிமுறை அல்ல. அது விதிவிலக்கு. ராகுல் காந்தி முகாந்தரமே இல்லாமல் இடைக்கால தடை கோருகிறார்” என்று தெரிவித்தார்.

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு – ஜூலை 15, 2023:

சூரத் செஷன்ஸ் நீதிமன்றம், குஜராத் நீதிமன்றம் ஆகியவற்றில் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இறுதியாக, உச்சநீதிமன்றத்தில் ஜூலை 15-ஆம் தேதி ராகுல்காந்தி மேல் முறையீடு செய்தார்.

உச்சநீதிமன்றத்தில் விசாரணை – ஜூலை 21:

உச்சநீதிமன்றம் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.கே. மிஷ்ரா ஆகியோர் தலைமையிலான அமர்வு இந்த மனுவை ஜூலை மாதம் 21-ம் தேதி விசாரித்தது. ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கில் பதில் அளிக்க குஜராத் அரசுக்கும், பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடிக்கும் உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், விசாரணையை ஆகஸ்டு 4-ம் தேதிக்கு தள்ளி வைத்தது.

இந்நிலையில் நேற்று ராகுல் காந்தி தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், குற்றவியல் நடைமுறை மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் செய்யாத குற்றத்திற்காக ஒருவரை மன்னிப்பு கேட்க நிர்பந்திப்பது நீதித்துறை செயல்முறையின் மோசமான துஷ்பிரயோகம். இந்த அவதூறு வழக்கில் தான் குற்றவாளி இல்லை. தனது பேச்சில் தவறு இல்லை. எனவே மன்னிப்பு கோர முடியாது. மன்னிப்பு கேட்க வேண்டும் என்றால் முன்னதாகவே செய்திருப்பேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆகஸ்ட்  4 – உச்சநீதிமன்ற விசாரணை:

இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ராகுல் காந்தி தரப்பில் வாதிடப்பட்டதாவது:

எனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு, கடத்தல், கொலை, பாலியல் வன்கொடுமை போன்ற கடுமையான குற்றம் அல்ல. மாறாக ஜாமின் பெறக்கூடிய ஒரு வழக்கு ஆகும். ஆனால் எனக்கு எதிரான அவதூறு வழக்கை கடுமையான குற்றமாக கருதி இரண்டு ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஒரு அவதூறு வழக்கிற்காக 8 ஆண்டுகள் மக்களுக்காக நான் பேசாமல் இருக்க வேண்டுமா? எனக்கு எதிராக கடுமையான குற்ற வழக்குகள் கிடையாது. எனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அத்தனை வழக்குகளும் பா.ஜ.க.வினரால் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் எதிலும் நான் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதில்லை. ஏற்கனவே இரண்டு கூட்டத்தொடர்களை இழந்து விட்டதாகவும் தனது தொகுதி மக்களுக்கான பணிகளை செய்ய முடியாமல் தடுக்கப்பட்டுள்ளேன்.

எதிர்மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி வாதிட்டதாவது: 

குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய பகுதியின் வீடியோ உண்மையானது. முழுமையாக உள்ளது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரியும் அதை உறுதி செய்துள்ளார். கீழமை நீதிமன்றத்திலும் அது உறுதியாகியுள்ளது. ராகுல் காந்தியின் நோக்கம் “மோடி” என்ற சமுதாயத்தை சேர்ந்தவர் பிரதமர் என்பதால் அவர் சார்ந்த சமுதாயத்தை அவமரியாதை செய்ய வேண்டும் என்பதுதான் என்று வாதிட்டார்.

உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு:

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அதிகபட்ச தண்டனையின் காரணமாக ஒரு தனி நபரின் உரிமை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தொகுதி மக்களின் உரிமையும் பாதிக்கப்படுகிறது, ஒரு தொகுதியின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் என்ற அளவிற்கு இந்த வழக்கு பொருத்தமானாதா?. இரண்டு ஆண்டு சிறை என்பதற்கு பதிலாக ஒரு ஆண்டு பதினோரு மாதம் என வழங்கப்பட்டிருந்தால் ராகுல் காந்தி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்திருக்க மாட்டார். ராகுல் காந்தி என்ற தனிநபருக்கு விதிக்கப்பட்ட இந்த தண்டனையால் அவர் சார்ந்த தொகுதி பாதிக்கப்படுகிறதே என்று விமர்சித்து ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.