சென்னை அண்ணாசாலையில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக பரவிய தகவலால் ஊழியர்கள் அலுவலகங்களை விட்டு அலறியடித்துக் கொண்டு வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை அண்ணா சாலை அருகே உள்ள ஒயிட் சாலையில் லேசான நில அதிர்வை
பொதுமக்கள் சிலர் உணர்ந்ததாக கூறப்படுகிறது. இந்த செய்தி மற்றவர்களுக்கு காட்டுத் தீயாக பரவியதால் பல்வேறு அலுவலகங்களில் பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்கள் அலுவலகங்களை விட்டு அவசர அவசரமாக வெளியேறினர்.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள இந்திய நிலநடுக்க ஆய்வியல் மையமான என்சிஎஸ், சென்னையில் நில அதிர்வுகள் ஏற்பட்டதற்கான எந்தவித தடயங்களும் இல்லை என்று தெரிவித்தது. அதேநேரத்தில் அண்ணாசாலையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளால் நில அதிர்வுகள் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது.
கட்டடங்களை இடிக்கும் பணி நடைபெற்றதால் நில அதிர்வு உணரப்பட்டிருக்கலாம் என்றும் தகவல் வெளியானது. ஆனால் இதனை மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. சென்னை அண்ணாசாலையில் நில அதிர்வு உணரப்பட்டதற்கு மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் காரணமல்ல என்றும், நில அதிர்வு உணரப்பட்ட இடங்களில் எவ்வித மெட்ரோ ரயில் திட்டப் பணிகளும் நடைபெறவில்லை என்றும் விளக்கமளித்துள்ளது.
இதன் வீடியோ செய்தி:
- பி.ஜேம்ஸ் லிசா









