குளிர்பானம் குடித்ததால் சிறுமி உயிரிழந்தாரா? போலீசில் புகார்

சென்னையில், மளிகைக் கடையில் குளிர்பானம் வாங்கிக் குடித்ததால் 13 வயது சிறுமி உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தை சேர்ந்த சதீஷ் – காயத்ரி தம்பதியின் 13 வயது மகள் தரணி. கொரோனா…

சென்னையில், மளிகைக் கடையில் குளிர்பானம் வாங்கிக் குடித்ததால் 13 வயது சிறுமி உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தை சேர்ந்த சதீஷ் – காயத்ரி தம்பதியின் 13 வயது மகள் தரணி. கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், தரணி தனது அக்கா அஸ்வினியுடன், சென்னை பெசன்ட் நகரில் உள்ள மாமா விக்னேஷ் வீட்டிற்கு வந்து தங்கியிருந்தார்.

மாலையில் விளையாடிக் கொண்டிருந்த தரணி, வீட்டின் அருகே உள்ள மளிகை கடையில் குளிர்பானம் வாங்கி குடித்துள்ளார். டோகிட்டோ கோலா ((Togito cola)) என்ற குளிர் பானத்தையும், ரஸ்னாவையும் தரணி வாங்கி அருந்தியதாகக் கூறப்படுகிறது. பின்னர் வீட்டிற்கு வந்த சிறிது நேரத்திலேயே சிறுமிக்கு வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டுள்ளது. மூக்கிலிருந்து ரத்தத்துடன் சளியும் வெளியேறியதாகவும் உடல் நீல நிறத்திற்கு மாறியதாகவும் கூறப்படுகிறது.

தரணியின் நிலையைப் பார்த்து பயந்துபோன அஸ்வினி, வெளியே சென்றிருந்த மாமா வுக்கும் உறவினர்களுக்கும் தகவல் அளித்துள்ளார். பதறியபடி வந்த உறவினர்கள், உடனடி யாக அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு தரணியை தூக்கிச் சென்றனர். அங்கு, பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து, சாஸ்திரி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சிறுமியின் உடலை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். சிறுமி குடித்ததாகக் கூறப்படும் குளிர்பானங்களின் மாதிரிகளை போலீசார் கைப்பற்றி, ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

உடற்கூராய்வுக்கு பின்பே சிறுமியின் மரணத்திற்கு, அவர் குடித்த குளிர்பானம் காரணமா என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.