போலி சின்ன வெங்காய விதைகளை விற்பனை செய்த நிறுவனம், நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியால் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்கியது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த பெல்லம்பட்டி, குண்டடம், நவநாரி உள்ளிட்ட கிராமங்களில் விற்பனை செய்த சின்ன வெங்காய விதைகளை வாங்கிய விவசாயிகள், ஆயிரத்து 500 ஏக்கரில் பயிரிட்டு அறுவடைக்காக காத்திருந்தனர். பின்னர் விளைச்சல் கண்டிருந்த வெங்காய விதைகள், போலி என அறிந்த விவசாயிகள், தாராபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இதுகுறித்த செய்தி நியூஸ் 7 தமிழில் வெளியானது. இதனையடுத்து போலி விதைகளை விற்பனை செய்த தனியார் நிறுவனம் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேளாண்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
பின்னர் பெல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, 36 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகையை தனியார் நிறுவன அதிகாரிகள் வழங்கினர். அப்போது, போலி சின்ன வெங்காய விதை தொடர்பான செய்தியை வெளியிட்ட நியூஸ் 7 தமிழ் தொலைக் காட்சிக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.
மேலும், கடை உரிமையாளர்கள் தரமான விதைகளை உரிய ரசீதுடன் விற்பனை செய்ய வேளாண் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.








