88 வயது மனைவியுடன், 93 வயது சாருஹாசன் கைகோர்த்த படி மகிழ்ச்சியுடன் வாக்கிங் செல்லும் வீடியோவை, நடிகை சுஹாசினி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவின் மாபெரும் கலைஞனாக விளங்கும் நடிகர் கமல்ஹாசனின் குடும்பத்தில் அவரைத் தாண்டி கவனத்தை ஈர்ந்த முக்கியமான கலைஞர்களுள் ஒருவர் அவரது மூத்த சகோதரர் சாருஹாசன். நடிகை சுஹாசினியின் தந்தையான சாருஹாசன், கோலிவுட்டின் பிரபல குணச்சித்திர நடிகர்களுள் ஒருவராக விளங்கி வருகிறார். தமிழ் சினிமாவை தாண்டி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ள சாருஹாசன் சிறந்த பல கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.
வழக்கறிஞரான சாருஹாசன், தமிழில் இயக்குநர் மகேந்திரனின் ‘உதிரிப்பூக்கள்’ படத்தில் நடிகை அஸ்வினியின் தந்தையாக நடித்து அறிமுகப் படத்திலேயே கவனத்தை ஈர்த்தார். பரமக்குடியை பூர்விகமாகக் கொண்ட சாருஹாசன், 1986ஆம் ஆண்டு தன் நடிப்புக்காக தேசிய விருதை பெற்றுள்ளார். இறுதியாக தமிழில் தாதா 87 படத்தில் நடித்தார். இவர் புதிய சங்கமம், ஐபிசி 215 எனும் படங்களை இயக்கியும் உள்ளார். திரைத்துறை மட்டும் அல்லாமல் 2015-ம் ஆண்டு டெல்லி உலக புத்தக நிகழ்வில் தன் சுயசரிதை புத்தகமான ”திங்கிங் ஆன் மை ஃபீட்” எனும் புத்தகத்தை வெளியிட்டார்.
தற்போது சாருஹாசனுக்கு 93 வயது நிரம்பியுள்ள நிலையில் சினிமாவில் தேர்ந்தெடுத்த படங்களில் மட்டும் நடித்து வருகிறார். இவரது மனைவி ராஜலட்சுமிக்கு தற்போது 88 வயதாகிறது. இந்நிலையில், தன் தந்தை மற்றும் தாய் இருவரும் கைகோர்த்த படி மகிழ்ச்சியுடன் நடைபயிற்சி செய்யும் வீடியோவை, நடிகை சுஹாசினி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
நடிகை குஷ்பு, கிகி சாந்தனு உள்ளிட்ட பலர் இந்த வீடியோவில் தங்களது வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர்.







