பிரபல ஹாலிவுட் அக்சன் ஹீரோவான அர்னால்ட் ஸ்வார்சநேகர், நெட்ஃப்ளிக்ஸ் OTT-யின் Chief Action Officer ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹாலிவுட் நடிகரும் முன்னாள் கலிஃபோர்னியாவின் ஆளுநருமான அர்னால்டு ஸ்வாஸ்நேக்கர் உலக ரசிகர்களின் பிரியமான நடிகராக இன்று வரை இருந்து வருகிறார். குறிப்பாக ஹாலிவுட் சினிமாக்களில் 1970-களின் மத்தியில் நடிக்கத் துவங்கிய இவர், 1984-ம் ஆண்டு வெளியான ‘தி டெர்மினேட்டர்’ படத்தின் மூலமாகத் தான் ஹாலிவுட்டில் பிரபலமானார். அதை தொடர்ந்து 1991-ம் ஆண்டு வந்த டெர்மினேட்டர் 2, தி
ஜட்ஜ்மெண்ட் டே திரைப்படம், ஹாலிவுட்டை கடந்து உலகளவில் மாபெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து டோட்டல் ரீகால், ட்ரூ லைஸ், கமாண்டோ போன்ற திரைப்படங்கள் இவரை முழுமையான அக்சன் ஹீரோவாக மாற்றியதோடு, இன்று வரை ஹாலிவுட்டில் அக்சன் படங்களின் நாயகன் என்றால் அது அர்னால்ட் ஸ்வார்சநேகர் தான் என்ற பெயரும் இவருக்கு கிடைத்தது.
கடைசியாக கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான டெர்மினேட்டர் : டார்க் ஃபேட் என்ற படத்தில் நடித்திருந்த இவர், சமீபத்தில் ‘ஃபுபார்’ (FUBAR) என்ற வெப்சீரிஸில் முதல் முறையாக நடித்திருந்தார். நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி உள்ள இந்த வெப் சீரிஸில் 65 வயது ஓய்வுபெற்ற சிஐஏ ஏஜெண்டாக அர்னால்டு நடித்துள்ளார். தந்தை – மகளுக்கு இடையிலான உறவை நகைச்சுவை பாணியில் சொல்லும் இந்த வெப் சீரிஸ் தற்போது மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், நெட்ஃப்ளிக்ஸ் OTT-யின் Chief Action Officer ஆக, அர்னால்ட் ஸ்வார்சநேகர் நியமிக்கப்பட்டுள்ளார் என புதிய வீடியோ ஒன்றை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதில் அலுவலகத்துக்கு பீரங்கியில் வந்து இறங்கும் அர்னால்டு, ரசிகர்கள் விரும்பும் ஆக்ஷன் படங்களை தேர்வு செய்ய தன்னை விட பொருத்தமானவர் யார் இருக்க முடியும் என கேட்பதுபோல் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஹாலிவுட் நடிகர், திரைப்பட இயக்குனர், தொழில் அதிபர், அமெரிக்க அரசியல்வாதி, கலிபோர்னியா மாகாணத்தின் முன்னாள் கவர்னர் என பல முகங்களை கொண்ட அர்னால்டு, தற்போது புதிய முகமாக நெட்ஃப்ளிக்ஸ் OTT-யின் Chief Action Officer என்ற புதிய பொறுப்பை ஏற்றுள்ள சம்பவம் அவரது
ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா









