மதுரை ரயில் நிலையம் அருகே சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக தனியார் சுற்றுலா நிறுவனம் மீது தெற்கு ரெயில்வே காவல் துறை வழக்குப் பதிந்துள்ளது.
மதுரை ரயில் நிலையத்தில், யார்டு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயில் பெட்டியில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து ரயிலில் பயணம் செய்த 63 பேரில், 20 பேர் படுகாயமடைந்த நிலையில் 9 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். அவர்கள் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதும், ஆன்மீக சுற்றுலா வந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூரைச் சேர்ந்த தனியார் டிராவல்ஸ் நிறுவனம் மீது காவல் துறை வழக்குப் பதிந்துள்ளது. தனியார் நிறுவன உரிமையாளரை கைது செய்ய லக்னெள காவல் துறைக்கு தெற்கு ரயில்வே தகவல் அனுப்பியுள்ளது.







