நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் அரசியல் சாசனப்படி ஆளுநர் தனது கடமையைச் செய்யவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நீட் விலக்கு தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
இதில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, மா சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் காங்கிரஸ், பாமக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 10 கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2007ஆம் ஆண்டில் நுழைவுத்தேர்வை ரத்து செய்யும் சட்டத்திற்கு 87 நாட்களுக்குள் குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்ததை சுட்டிக்காட்டினார். நீட் விலக்கு மசோதாவை 142 நாட்களுக்குப் பிறகு ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளதாக கூறிய அவர், அரசியல் சாசனப்படி ஆளுநர் ஆர்.என்.ரவி தனது கடமையை செய்யவில்லை என குற்றம்சாட்டினார்.







