80-வது சுதந்திர தினம்: செங்கோட்டையில் கொடியேற்றினார் பிரதமர் மோடி!

நாட்டின் 80-வது சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி, நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.

நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனைத்தொடர்ந்து, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.
இந்தியாவின் 80-வது சுதந்திர தினம் வந்தே மாதரம் பாடலுடன் தொடங்கியது. இதனையடுத்து சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது, “சுதந்திர தினம் விழாவில் நமது சுதந்திரத்திற்காக பாடுபட்ட அனைத்து சுதந்திர போராட்ட வீரர்களை நினைவு கூறுகிறேன்.

முதன்முதலாக ஆகஸ்ட் 15ஆம் தேதி செங்கோட்டையில் வந்தே மாதரம் இசைக்கப்பட்டுள்ளது இது ஒரு மாபெரும் வரலாறு ஆகும். நமது தேசம் முன்னோக்கி சென்று கொண்டிருக்கின்றது. 2047 இல் இந்தியாவை வளர்ந்த பாரதமாக மாற்றுவோம்.உறுதியான மன உறுதி இந்தியாவுக்கு ஒரு புதிய தருணத்தை அளிக்கும். உலகம் நம்மை உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றது. நாம் நாடு உலக அளவில் மிக வேகமாக பொருளாதாரத்தில் வளர்ந்து வருகிறது.

எல்லா வீடுகளிலும் மூவர்ணக் கொடி, எல்லா இதயங்களிலும் மூவர்ணக் கொடி என்ற இந்த உணர்வு புதிய சவால்களை உடைத்து எறிந்து விட்டு முன்னேறி செல்வதற்கான உத்வேகத்தை நாட்டு மக்களுக்கு வழங்குகிறது. ராணுவ தளவாடங்கள் உற்பத்தியில் நாம் தன்னிறைவை அடைந்து வருகிறோம். இந்தியா முன்னெப்போதும் இல்லாத வகையில் வளர்ந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக இந்தியா உலக அளவில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. இந்தியாவின் மீதான உலகத்தின் பார்வை தற்போது முற்றிலுமாக மாறி உள்ளது. இந்தியா அனைவருக்கும் முன்னோடியாக சென்று கொண்டிருக்கின்றது

விரைவில் புதிய அணு உலைகள் திறக்கப்படும்

செமி கண்டக்டர் துறையில் நாம் மிக வேகமாக முன்னேறி வருகிறோம் வேறு எந்த நாடுகளையும் நம்பியில்லாமல் நம்மை நாமே தன்னிறவு செய்து கொள்ளும் நிலைக்கு வந்திருக்கிறோம். தன்னிறைவு பெற்ற இந்தியா என்பதை அடைய மிக முக்கியமாது செமி கண்டக்டர்கள் ஆகும். செயற்கை நுண்ணறிவு மற்றும் சிப் உற்பத்திக்கு ஆற்றல் உள்கட்டமைப்பு மிக முக்கியமானது. செயற்கை நுண்ணறிவு தரவுகள் சேமிப்பு மையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நாம் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது.

உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு குரல் கொடுப்போம் என்ற உணர்வோடு மக்கள் இணைந்து செயல்படுகிறார்கள். ஒவ்வொரு இந்தியரும் இப்போது உள்ளூர் தயாரிப்புகள் மற்றும் சுதேசிப் பொருட்களுக்கு ஆதரவளித்து வருகிறார்கள். சுயசார்பு அடையும் முயற்சியாக இந்தியா செமிகண்டக்டர் ஆலைகளை அமைத்துள்ளது; அதன் உற்பத்தியும் ஏற்கனவே தொடங்கிவிட்டது.

கடந்த 12 ஆண்டுகளில் பாதுகாப்புத் துறை உற்பத்தி 4 மடங்கு அதிகரித்துள்ளது. மின்னணுப் பொருட்களின் தயாரிப்பு 7 மடங்கு அதிகரித்துள்ளது. நவீன இரயில் பெட்டிகளின் உற்பத்தி 21 மடங்கு அதிகரித்துள்ளது. நாட்டில் இணையத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்துள்ளது. டிஜிட்டல் முறையிலான பணப் பரிவர்த்தனைகள் 100 மடங்கு அதிகரித்துள்ளன. சூரிய சக்தி ஆற்றல் மின்சாரம் என்பது 2 கிகா வாட்ல் இருந்து 160 கிகா வாட்டாக உயர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 70% ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டு விட்டது.

வரும் ஆண்டில், 1 கோடி இளைஞர்களுக்கு AI தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படும். 2047 ஆம் ஆண்டு இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாறுவதற்கு முக்கிய காரணியாக இருக்கப்போவது நமது இளைஞர்கள் தான் அதனால் தான் நமது இளைஞர்களுக்கு தேவையான விஷயங்களை பார்த்து பார்த்து செய்கிறோம். 2036 ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா

அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக மகளிர் இட ஒதுக்கீடு மசோதா பலிகடா ஆகிவிடக்கூடாது . இந்தியாவின் வளர்ச்சியில் ஒரு பெரிய பங்களிப்பை வழங்குகிறவர்கள் நமது நாட்டின் பெண்கள் அந்த பெண்களுக்கு தேவையான மரியாதையை நாம் செலுத்த வேண்டும், அதனை 33 சதவிகித இட ஒதுக்கீட்டு மூலமாகத்தான் நம்மால் செய்ய முடியும். எனவே அனைத்து கட்சியினரும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ஆதரிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் இந்த மசோதா நிறைவேற அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.” இவ்வாறு அவர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.