விபத்தில் சிக்கி 8 மாத கர்ப்பிணி பலி; வயிற்றில் இருந்த குழந்தையும் உயிரிழந்த சோகம்

சென்னையில் 8 மாத கர்ப்பிணியும், அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் சிவாரெட்டி(27). இவர் இந்திய கடற்படையில் பணியாற்றினார். இவருக்கும் லலிதா(22)…

சென்னையில் 8 மாத கர்ப்பிணியும், அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் சிவாரெட்டி(27). இவர் இந்திய கடற்படையில் பணியாற்றினார். இவருக்கும் லலிதா(22) என்பவருக்கும் ஓராண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள நல்லதம்பி தெருவில் வசித்து வந்தனர். லலிதா 8 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு மெரினா காமராஜர் சாலையில், மாநிலக் கல்லூரி அருகே இருசக்கர வாகனத்தில் சிவாரெட்டி மற்றும் லலிதா சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த கடற்படை பேருந்து, அவர்கள் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.

அப்போது கடற்படை பேருந்தின் பின்பக்க சக்கரம் லலிதாவின் தலையில் ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப் பார்த்த அப்பகுதியில் இருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள், எப்படியாவது குழந்தையை காப்பாற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் உடனடியாக அருகில் உள்ள கஸ்தூரிபாய் காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு லலிதாவின் உடலை எடுத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

விபத்தில் கைமுறிவு ஏற்பட்டு பலத்த காயமடைந்த சிவாரெட்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற கடற்படை பேருந்தை பொதுமக்கள் விரட்டிச் சென்றனர். நேப்பியர் பாலம் அருகே சென்றபோது மடக்கிப் பிடித்து, பேருந்தை அடித்து நொறுக்கினர். இதனால் பேருந்தில் இருந்த ஓட்டுநர் தப்பியோடினார்.

இந்த விபத்து தொடர்பாக அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து கடற்படை பேருந்து ஓட்டுனர் ராகேஷ் குமார் என்பவரை கைது செய்தனர். 8 மாத கர்ப்பிணியும், அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் விபத்தில் சிக்கி உயிரிழந்த இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.