உறுப்பு நாடுகள் ஒருமித்த கருத்தை எட்டாததால், 27வது காலநிலை மாற்ற உச்சி மாநாடு மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
எகிப்து நாட்டில் 27வது காலநிலை மாற்ற உச்சி மாநாடு கடந்த நவம்பர் 6 ஆம் தேதி தொடங்கியது. நவம்பர் 18ம் தேதியோடு மாநாடு நிறைவடையும் என திட்டமிடப்பட்டிருந்த
நிலையில், உச்சி மாநாடு மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வரலாற்றில் முதல் முறையாக இந்த மாநாட்டில் காலநிலை மாற்றத்தால் பாதிப்பை சந்திக்கும் வளரும் நாடுகளுக்கு, இழப்பீடு நிதியை வளர்ந்த நாடுகள் வழங்க வேண்டும் என்கின்ற கொள்கை சேர்க்கப்பட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த கொள்கை சேர்க்கப்பட்டது, இம்மாநாட்டின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.
ஆனால் இந்த கொள்கையில் உறுப்பு நாடுகளிடையே ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக, திட்டமிட்டதை விட கூடுதலாக இன்று ஒரு நாள் இந்த மாநாடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்றும் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை என்றால், நாளையும் மாநாடு நீட்டிக்கப்பட்ட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று மாநாட்டில் வெளியிடப்பட்ட வரைவு திட்ட அறிக்கையில், வளரும் நாடுகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு நிதி குறித்த அறிவிப்புகள் பெரிதாக இடம்பெறாதது, வளரும் நாடுகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.







