மோடி – நேபாள பிரதமர் சந்திப்பு: ஆன்மிகப் பரிசுகள் பரிமாற்றம்!

இந்தியாவுக்கு அரசு முறைப் பயணமாக வந்துள்ள நேபாள பிரதமர் பாலேந்திர ஷாவுக்கு, திரிவேணி சங்கமத்திலிருந்து கொண்டுவரப்பட்ட கங்கை நீரை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார். பதிலுக்கு, பசுபதிநாதர் கோயிலின் புனித ருத்ராட்சம் மற்றும் சந்தனத்தை மோடிக்கு பாலேந்திர ஷா பரிசளித்தார்.

இந்தியா – நேபாளம் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், நேபாள பிரதமர் பாலேந்திர ஷா இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். கடந்த மார்ச் 2026-ல் நேபாள பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் இந்தியப் பயணம் இதுவாகும். நவம்பர் 22 முதல் 23-ம் தேதி வரை இந்தப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திங்கள்கிழமையான இன்று (நவம்பர் 23) டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, பாலேந்திர ஷா சந்தித்துப் பேசினார். அப்போது, திரிவேணி சங்கமத்திலிருந்து கொண்டுவரப்பட்ட கங்கை நீர் அடங்கிய கலசத்தை நேபாள பிரதமருக்கு மோடி பரிசாக வழங்கினார். இதற்குப் பதிலாக, புகழ்பெற்ற பசுபதிநாதர் கோயிலிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித ருத்ராட்சம் மற்றும் சந்தனத்தை மோடிக்கு பாலேந்திர ஷா வழங்கினார்.

இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

இந்தச் சந்திப்பின்போது இரு நாட்டுத் தலைவர்களும் இந்தியா – நேபாளம் இடையிலான உறவுகளின் முழுமையான அம்சங்கள் குறித்தும், பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினர். இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், பொருளாதார ஒத்துழைப்பு, வளர்ச்சித் திட்டங்கள், எரிசக்தி, நீர்வளங்கள், போக்குவரத்து மற்றும் டிஜிட்டல் இணைப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு தொடர்ந்து முன்னேறி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புத்தொழில் நிறுவனங்கள், தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட புதிய துறைகளிலும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு அதிகரித்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

34 பேர் கொண்ட குழுவுக்கு மோடி விருந்து!

நேபாள பிரதமர் பாலேந்திர ஷா மற்றும் அவருடன் வந்துள்ள 34 பேர் கொண்ட அரசு பிரதிநிதிகள் குழுவுக்கு பிரதமர் மோடி சிறப்பு மதிய விருந்து அளிக்க உள்ளார். இந்தப் பயணத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது, குறிப்பாக வர்த்தகம், போக்குவரத்து, முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு தொடர்பாக முக்கிய ஆலோசனைகள் நடைபெற உள்ளன.

மேலும், கல்வி, சுகாதாரம், விவசாயம், விளையாட்டு, பேரிடர் மேலாண்மை மற்றும் மனிதவள மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எரிசக்தி மற்றும் போக்குவரத்து இணைப்புத் திட்டங்களுக்கும் இந்தப் பயணத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது. ஏற்கெனவே நிறைவடைந்துள்ள சில திட்டங்களை இரு நாட்டுத் தலைவர்களும் தொடங்கி வைப்பதுடன், புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பாலேந்திர ஷா!

இதற்கிடையே, இன்று (நவம்பர் 23) காலை டெல்லியில் உள்ள ராஜ்காட்டுக்குச் சென்ற நேபாள பிரதமர் பாலேந்திர ஷா, மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அங்குள்ள பார்வையாளர் குறிப்பேட்டில் தனது கருத்தைப் பதிவு செய்த அவர், உண்மைக்கு எந்தவொரு சக்தியாலும் ஈடுகொடுக்க முடியாத வலிமை இருப்பதாகவும், கருணையே உயர்ந்த வலிமை என்றும் குறிப்பிட்டார்.

மேலும், புத்தர் பிறந்த மண்ணிலிருந்து வந்துள்ள தான், மகாத்மா காந்தியின் வாழ்க்கையிலும் அதே அழியாத ஒளியைக் காண்பதாகத் தெரிவித்தார். ஏழை, எளிய மக்களுக்கான தன்னலமற்ற சேவையில்தான் உண்மையான தலைமைப் பண்பு அடங்கியுள்ளது என்றும் குறிப்பிட்டார். இந்தியா – நேபாளம் இடையிலான நீண்டகால நட்புறவை நேர்மை, பரஸ்பர மரியாதை மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் தொடர்ந்து வளர்ப்பதற்கு நேபாள அரசு உறுதிபூண்டுள்ளதாகவும் தனது பதிவில் பாலேந்திர ஷா தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக, குடியரசுத் தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் பாலேந்திர ஷாவுக்கு அரசு முறைப்படி அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடியும் பங்கேற்றிருந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.