தென்மேற்கு பருவ காற்றின் காரணமாக, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையத் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 21 சென்ட்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று கோவை, தேனி, திருநெல்வேலி, விழுப்புரம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது. இதற்கிடையே, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், எனவே அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். என்றும் எச்சரிச்சைவிடுக்கப்பட்டுள்ளது.







