போலி நேர்முகத்தேர்வுகள் நடத்தி மோசடி – 8 பேர் கைது

அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழுவின் பெயரில் போலியான நேர்முகத்தேர்வுகள் நடத்தி மோசடியில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுவின் தென் மண்டல அதிகாரி சுந்தரேசன்…

அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழுவின் பெயரில் போலியான நேர்முகத்தேர்வுகள் நடத்தி மோசடியில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுவின் தென் மண்டல அதிகாரி
சுந்தரேசன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை
அளித்திருந்தார். இந்த புகாரில் தங்களுடைய குழுமத்தின் பெயர் மற்றும் லோகோவை பயன்படுத்தி காஞ்சிபுரம், சேலம், மதுரை, கோயம்புத்தூர், திருப்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் போலியான நேர்முகத் தேர்வு நடைபெறுவதாக புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு வேலைவாய்ப்பு மோசடி பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. விசாரணையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாநில அரசின் ஓட்டுநர் வேலை, அலுவலக உதவியாளர் வேலை ஆகிய வேலைகளுக்கு 2 லட்சம் முதல் 4 லட்சம் ரூபாய் வரை கொடுத்து ஏமாந்தது தெரியவந்தது இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் சுரேந்திரன் மற்றும் ஆய்வாளர் மகாலட்சுமி ஆகியோர் தனிப்படை அமைத்து தீவிரமாக குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இதையடுத்து, நேர்முக தேர்வு திருப்பத்தூரில் நடத்தப்போவதாக தகவல் கிடைத்தவுடன் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்பொழுது திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சூரியா, அருண்குமார், தர்மலிங்கம், தயாநிதி, ராஜேஷ், சக்கரவர்த்தி, பிரபு மற்றும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த யோகானந்தம் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்து சென்னை கொண்டு வந்தனர்.

அதன்பிறகு தொடர்ச்சியாக நடந்த விசாரணையில், இவர்கள் 1.50 கோடி ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்தது. மேலும் இரண்டு முக்கிய குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். இதுவரை கைது செய்யப் பட்ட 8 பேரும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுபோன்ற அரசு வேலைகளை மற்றவர்களை நம்பி ஏமாற வேண்டாம் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.