ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெறும் 76 ரன்களை மட்டுமே வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. நாளை அந்த இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா களமிறங்குகிறது.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் இந்தூரில் நடைபெற்று வருகிறது. டாஸ்வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியின் அபார பந்து வீச்சால் இந்திய அணி 109 ரன்களில் ஆல்அவுட் ஆனது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி சிறப்பாகவே ஆடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா 60 ரன்கள் எடுத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
லபுசேங், ஸ்மித் போன்ற பேட்ஸ்மென்களும் சற்று நிதானமாக ஆடினர். முதல் நாள் ஆட்டம் முடிவில் அந்த அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. இரண்டாம் நாள் ஆட்டம் தொடக்கத்தில் அந்த அணி சிறப்பாகவே ஆடியது. ஆனால் ஒருகட்டத்தில் இந்திய அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து திணறியது. முதல் இன்னிங்ஸில் அந்த அணி 197 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்திய அணித்தரப்பில் ஜடேஜா 4, உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வின் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். இதன் மூலம் முதல் இன்னிங்ஸில் அந்த அணி இந்தியாவை விட 88 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி ஆடி வருகிறது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 12 ரன்களிலும், சுப்மன் கில் 5 ரன்களிலும் அவுட்டாகினர். தொடர்ந்து களமிறங்கிய புஜாரா அதிரடியாக விளையாடி அரை சதமடித்தார். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது 35-வது அரைசதத்தை அவர் பதிவு செய்தார். 59 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவர் அவுட்டானார். தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 26 ரன்கள் எடுத்தார்.
இந்நிலையில், 2-வது இன்னிங்சில் இந்திய அணி 163 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி சார்பில் நாதன் லியோன் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேத்யூ, மிட்செல் ஸ்டார்க் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இந்திய அணி 75 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. நாளை 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
-ம.பவித்ரா